மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன செயற்பட்டுவந்த நிலையில், அவரின் இடத்துக்கு மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
>> ஆப்கானின் T20 உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு
மஹேல ஜயவர்தனவின் பயிற்றுவிப்பின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2017ம் ஆண்டு முதல் விளையாடி வருவதுடன், இதில் 3 தடவைகள் கிண்ணத்தை வென்றுள்ளது.
தற்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள SA20 லீக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ILT20 தொடர்களில் அணிகளை வாங்கியுள்ளது. எனவே, குறித்த இரண்டு அணிகளுடன் மொத்தமாக மூன்று அணிகள் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கீழ் விளையாடவுள்ளன.
இதன்காரணமாக மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸின் அனைத்து அணிகளுக்குமான செயற்திறன் தலைமையாளராக (Global Head of Performance) நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பொறுப்பு மார்க் பௌச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மார்க் பௌச்சர் தென்னாபிரிக்க அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் நிலையில், அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<