T20i கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்

264
Multiple records for Suryakumar Yadav
@BCCI

சர்வதேச T20 கிரிக்கெட்டில் நடப்பு ஆண்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர் என்ற ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து சூர்யகுமார் யாதவ் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற முதலாவது T20i கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அர்ஷ்தீப் சிங்கின் துல்லியமான பந்துவீச்சு, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதங்கள் என்பன இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தன.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவுடனான முதல் T20i போட்டியில் அரைச் சதமடித்தன் மூலம் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் T20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

நடப்பு ஆண்டில் (2022) நடைபெற்ற T20i போட்டிகளில் 732 ஓட்டங்களைக் குவித்த சூர்யகுமார் யாதவ், ஒர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவானை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக ஷிகர் தவான் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற T20i போட்டிகளில் 689 ஓட்டங்களைக் குவித்திருந்ததே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதனை தற்போது சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில், விராட் கோஹ்லி (641 ஓட்டங்கள் – 2016), ரோஹித் சர்மா (590 ஓட்டங்கள் – 2018), ரோஹித் சர்மா – (497 ஓட்டங்கள் – 2016) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இது தவிர, நேற்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்த சூர்யகுமார் யாதவ், சர்வதேச T20i கிரிக்கெட்டில் நடப்பு ஆண்டொன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வானின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த பட்டியலில் 45 சிக்ஸர்களுடன் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடிக்க, மொஹமட் ரிஸ்வான் (42 சிக்ஸர்களுடன் – 2021) 2ஆவது இடத்தையும், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் 41 சிக்ஸர்களுடன் (2021) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<