முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக்

1699
Multan Sultans

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த 5 அணிகளும், தமது அணியில் விளையாடியிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களுகளின் விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தன.

பாகிஸ்தான் சுப்பர் லீக் அணிகளிலிருந்து நட்சத்திர வீரர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது…

இவ்வாறு விடுவிக்கப்பட்ட வீரர்களில், 4 பிரிவுகளிலிருந்து தமது அணிக்கான முக்கிய 9 வீரர்களை நேற்று (10) இடம்பெற்ற விசேட ஏலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள போட்டித் தொடரில் 6ஆவது அணியாக களமிறங்கவுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.  

இதன்படி, கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடியவரும், டயமென்ட் பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்காரவை முல்தான் சுல்தான்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன், அவ்வணியின் ஆலோசகராகவும் அவர் செயற்படவுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெறும் T-20 போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்ற சங்கக்கார, கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார்.

முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு சங்கக்காரவை ஒப்பந்தம் செய்தமை தொடர்பில் அவ்வணியின் பணிப்பாளரான வசீம் அக்ரம் கருத்து வெளியிடுகையில், உலக கிரிக்கெட்டில் உருவான சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக குமார் சங்கக்கார விளங்குகிறார். 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி வந்த அவர், ஓட்டங்களைக் குவித்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கின்ற காலத்தில் ஓய்வும் பெற்றார்.

ஆனால், அவர் விக்கெட் காப்பாளராக சளைக்காமல் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகின்ற T-20 போட்டிகளில் விளையாடி வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, அவரைப் போன்ற வீரரொருவர் எமது அணியில் இடம்பெற்றிருப்பது இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும்” என அவர் தெரிவித்தார்.

மேலும், பிளெட்டினம் பிரிவில் இடம்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை ஆட்டக்காரரான கிரென் பொல்லார்ட், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான சொஹைப் மலிக், கோல்ட் பிரிவில் இடம்பெற்று லாகூர் கிளெண்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்த சொஹைல் தன்வீர், ஜுனைத் கான் மற்றும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி போட்டித் தடைக்குப் பிறகு மீண்டும் விளையாடி வருகின்ற மொஹமட் இர்பான் ஆகியோரையும் அவ்வணி ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், சில்வர் பிரிவிலிருந்து பாகிஸ்தானின் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் சுழற்பந்து வீச்சாளரான இர்பான் கான், சகலதுறை வீரர் காசிப் பாத்தி மற்றும் மத்திய வரிசை வீரர் சொஹைப் மக்சூத் ஆகிய வீரர்களும் முல்தான் அணிக்காக விளையாடவுள்ளனர்.

அத்துடன், கடந்த இரண்டு பருவகாலங்களிலும் கராச்சி அணிக்காக விளையாடியிருந்த மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்லை நேற்று நடைபெற்ற ஏலத்தில் சுல்தான் அணி ஒப்பந்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ஹேரத் விரும்பும் காலம் வரை தனது பாணியில் விளையாட வேண்டும் – ரிச்சர்ட் ஹார்ட்லி

இலங்கை அணியின் இடது கை சுழல் ஜாம்பவான் ரங்கன…

பாகிஸ்தானின் 5ஆவது மிகப் பெரிய நகரமாக கருதப்படுகின்ற சுல்தான் நகரம், புனிதர்களின் புனித பூமியாகவும், பாரம்பரியமிக்க ஷஸபிக்கள் வாழ்கின்ற பணக்கார நகரமாகவும் விளங்குகின்றது. அத்துடன் இவ்வாண்டு ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஏலத்தில் டுபாயை மையமாகக் கொண்ட ஸ்கூன் குழுமம் பி.எஸ்.எல் வரலாற்றில் அதிகளவான பணத்தை செலுத்தி (41.6 மில்லியன் டொலர்கள்) அவ்வணியை வாங்கியிருந்தது.

சுல்தான் அணியின் பணிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான வசீம் அக்ரம் செயற்படவுள்ள அதேவேளை, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டொம் மூடி இவ்வணிக்கு பயிற்சியாளராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

நடைபெறவுள்ள பருவகாலப் போட்டிகளில், நடப்புச் சம்பியனான பெஷாவர் சல்மி, இஸ்லாமாபாத் யுனைடட், கராச்சி கிங்ஸ், லாகூர் கிளெண்டர்ஸ், குவாட்ட கிளெடியேட்டர்ஸ் ஆகிய அணிகளுடன் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்துகொண்ட முல்தான் சுல்தான்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை சிறப்பிக்கவுள்ளன.  

இதன்படி, புதிதாக ஏலத்தில் இணையவுள்ள வீரர்கள் உள்ளடங்கலாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்கவுள்ள வீரர்களைத் தெரிவு செய்வதற்கான பிரதான ஏலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல செய்திகளைப் படிக்க <<