பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஜாவேத் மியாண்டட்டுக்குப் பிறகு முதல்தரப் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் முச்சதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை மொஹமட் ஹுரைரா பெற்றுக்கொண்டார்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குவைட் ஈ அசாம் கிண்ணத்துக்கான முதல்தர கிரிக்கெட் தொடரில் நொதர்ன் அணிக்காக அறிமுகத்தைப் பெற்று விளையாடி வருகின்ற 19 வயதான ஹூரைரா, 327 பந்துகளில் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
முன்னதாக 1975ஆம் ஆண்டு ஜாவேத் மியாண்டட் நெஷனல் வங்கிக்கு எதிரான போட்டியில் 311 ஓட்டங்களை எடுத்து இளம் வயதில் முச்சதம் அடித்த முதலாவது பாகிஸ்தான் வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார். அப்போது மியாண்டடுக்கு வயது 17 ஆகும்.
இதனிடையே, பாகிஸ்தான் மண்ணில் பெறப்பட்ட 23ஆவது முச்சதமாகவும், பாகிஸ்தான் வீரர் ஒருவரால் பெற்றுக்கொண்ட 18ஆவது முச்சதமாகவும் இது இடம்பிடித்தது. அதேபோல, சர்வதேச அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 8ஆவது வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.
இதேநேரம், இந்த சீசனில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடி ஹுரைரா, 878 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் 3 சதங்களும், 3 அரைச்சதங்களும் அடங்கும்.
- இரண்டு தடவைகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி
- கொரோனாவால் பாகிஸ்தான், மே.தீவுகள் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு
பலொசிஸ்தான் அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 311 ஓட்டங்களை 340 பந்துகளில் எடுத்த மொஹமட் ஹுரைரா, 40 பௌண்ட்ரிகள் மற்றும் 4 சிக்ஸர்களையும் விளாசினார்.
எவ்வாறாயினும், குறித்த போட்டியில் பலொசிஸ்தான் அணியை வீழ்த்தி நொதர்ன் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
பாகிஸ்தானின் சியல்கோட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் சொஹைப் மலிக்கின் மருமகன் ஆவார்.
அதேபோல, பாகிஸ்தான் அணியில் தற்போது விளையாடி வருகின்ற இளம் வீரர் ஹைதர் அலியுடன் பாகிஸ்தான் 19 வயதின்கீழ் அணியில் சக வீரராக மொஹமட் ஹுரைரா விளையாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<