தனது முடிவுக்கு 8-9 மாத கால அவகாசம் எடுத்துள்ள டோனி

Indian Premier League 2023

248

ஓய்வு குறித்து முடிவு செய்ய இன்னும் 8-9 மாதங்கள் கால அவகாசம் இருப்பதாக சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் பிளே ஒப் சுற்றில் நேற்று முன்தினம் (23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் சுற்று ஆட்டத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணி, நடப்பு சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அதுமட்டுமல்லாமல் குஜராத் அணியை முதன்முறையாக வீழ்த்தி சாதனையும் படைத்தது.

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய எம்எஸ் டோனி, ‘IPL மிகப்பெரிய தொடராக மாறி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத கால போராட்டங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் வந்திருக்கிறோம். ஏனைய பருவங்களில் 8 அணிகளுக்கு பழக்கப்பட்டுவிட்டோம். இம்முறை 10 அணிகள் விளையாடுகின்றன. ஆகையால் ஏனைய இறுதிப்போட்டி போல் இதை எடுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறோம். இவை அனைத்திற்கும் அணியில் உள்ள அத்தனை வீரர்களும் கொடுத்த பங்களிப்பு தான் முக்கிய காரணம்’  என்றார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு சென்னையில் வந்து விளையாடுவீர்களா என்ற கேள்வி டோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி,

‘அடுத்த பருவத்தில் நான் விளையாடுவது குறித்து எதிர்வரும் டிசம்பரில் தான் முடிவு எடுப்பேன். அதற்கு இன்னும் 8 முதல் 9 மாதங்கள் இருக்கிறது. ஆதலால், இப்போதைக்கு அதைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. டிசம்பர் மாதம் தான் IPL மினி ஏலம் நடக்கும். அப்போது இருக்கும் எனது உடல் தகுதியை வைத்து அடுத்த பருவத்தில் விளையாடுவது குறித்து முடிவு எடுப்பேன். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் வீடுகளில் அதிக நேரம் இருப்பதில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் வீட்டை விட்டு வந்தேன். அதன் பிறகு மார்ச் மாதம் முதல் அணியோடு இணைந்து பயிற்சி செய்து வருகிறேன்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நான் அடுத்த பருவத்தில் விளையாடலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இப்போதைக்கு அந்த தலைவலியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சென்னை அணியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். எப்போதும் சென்னை அணியில் தான் இருப்பேன். அது இறுதிப் பதினொருவர் அணியிலோ அல்லது வெளியிலோ எதுவாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் சென்னை சுபர் கிங்ஸ் அணியில் தான் இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இம்முறை IPL தொடரில் சென்னை அணி சம்பியன் பட்டம் வென்றால் தோனி ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த பருவத்தில் டோனி விளையாடுவது மிகவும் வாய்ப்பு குறைவு என தெரிகிறது. குறிப்பாக எதிர்வரும் ஜூலை மாதம் வந்தால் டோனிக்கு 42 வயதாகிவிடும் என்பதால் இது கடைசி IPL  தொடராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<