ஆஸி. மண்ணில் சாதனை படைத்த மஹேந்திர சிங் டோனி

360
Image Courtesy - AFP

ஆஸி. மண்ணில் 1,000 ஓட்டங்களை கடந்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் மஹேந்திர சிங் டோனி நான்காவது வீரராக நேற்றைய (18) போட்டியின் மூலம் இடம்பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி அங்கு ஆஸி. அணியுடன் மூவகையான கிரிக்கெட் போட்டித் தொடர்களிலும் விளையாடியது.

ஆஸி மண்ணில் அவர்களை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைய, அதனை தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 72 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக ஆஸி. மண்ணில் வைத்து ஆஸி. அணியை 2-1 என்ற அடிப்படையில் வீழ்த்தி வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றி அதே ஆஸி. அணியை ஆஸி மண்ணில் வைத்து தோற்கடித்து சாதனை படைத்திருந்தது.

இதற்கு முன்னர் இந்திய அணி ஆஸி. மண்ணில் முத்தரப்பு தொடர் ஒன்றின் மூலம் விளையாடி வெற்றி பெற்றிருந்தாலும், இருதரப்பு தொடர் ஒன்றினை வெற்றி கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதன்படி இந்திய அணியினுடைய குறித்த ஒருநாள் தொடர் வெற்றிக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனியினுடைய பங்களிப்பு அளப்பெரியது. அவர் மொத்தமாக நிறைவுற்றிருந்த தொடரில் 193 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன் மூலம் டோனியே தொடர் நாயகனாக தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய டோனி மூன்று போட்டிகளிலும் அரைச்சதம் கடந்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அத்துடன் ஆரம்பத்தில் பந்துகளை அனாவசியமாக விடுகின்றார் என்ற விமர்சனத்துக்கும் அழகான முறையில் போட்டியை நிறைவுசெய்து காட்டியிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் நேற்று (18) மேல்பேர்னில் நடைபெற்ற தொடரை தீர்மானிப்பதற்கான தீர்க்கமான போட்டியில் டோனி நிதானமாக துடுப்பாடி ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதில் டோனி 36 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆஸி. மண்ணில் 1000 ஒருநாள் ஓட்டங்களை கடந்த நான்காவது இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

இதற்கு முன்னர் இந்த வரிசையில் லிட்டில் மாஸ்டர் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் தற்போதைய தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அணியின் தற்போதைய உபதலைவர் ரோஹிட் சர்மா ஆகியோர் இருந்தனர்.

சச்சின் டெண்டுல்கர் ஆஸி. மண்ணில் 46 இன்னிங்சுகளில் விளையாடி மொத்தமாக 1491 ஓட்டங்களை பெற்றுள்ளர். இதில் ஒரு சதம் மற்றும் 10 அரைச்சதங்கள் உள்ளடங்கும்.

விராட் கோஹ்லி ஆஸி. மண்ணில் 26 இன்னிங்சுகளில் விளையாடி மொத்தமாக 1154 ஓட்டங்களை பெற்றுள்ளர். இதில் 5 சதங்கள் மற்றும் 4 அரைச்சதங்கள் உள்ளடங்கும். ஆஸி. மண்ணில் கோஹ்லியின் சராசரி 50.17 சதவீதமாகும்.

ஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை A அணி

ரோஹிட் சர்மா ஆஸி. மண்ணில் 30 இன்னிங்சுகளில் விளையாடி மொத்தமாக 1328 ஓட்டங்களை பெற்றுள்ளர். இதில் 5 சதங்கள் மற்றும் 4 அரைச்சதங்கள் உள்ளடங்கும். ரோஹிட் சர்மாவின் சராசரி 53.12 சதவீதமாகும். மேலும் 171 ஓட்டங்களையும் ஆஸி. மண்ணில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ரோஹிட் சர்மா இந்த தொடரில் பெரிதாக பிரகாசிக்கவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது 4ஆவது வீரராக மஹேந்திர சிங் டோனி ஆஸி. மண்ணில் 31 இன்னிங்சுகளில் விளையாடி மொத்தமாக 1053 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 08 அரைச்சதங்கள் உள்ளடங்கும்.

37 வயதுடைய டோனி இதுவரையில் 335 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10,366 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 10 சதங்கள் மற்றும் 70 அரைச்சதங்களும் உள்ளடங்கும்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி ஓய்வு பெற்றிருந்தாலும், டோனியினுடைய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளினுடைய ஓய்வு தொடர்பில் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியானது அவரை தொடர்ந்தும் அணிக்காக விளையாட வைத்து வருகின்றது. அத்துடன் டோனியும் தன்னுடைய ஓய்வு தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<