உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ள 8ஆவது ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகி விறுவிறுப்புக்கு பஞசமின்றி இடம்பெற்று வருகின்றது.
T20 கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வீரர்கள் அந்தந்த அணிகளின் கவனத்தை ஈர்த்தவர்களாக இருக்கலாம். ஆனால், பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்கின்ற பணியை செய்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் வரையறுக்கப்பட்ட வடிவமாக உள்ள T20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் புதுப்புது நுணுக்கங்களையும், யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர். இதன்மூலம் பந்துவீச்சாளர்களுக்கு குறித்த வடிவத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துகின்ற வாய்ப்பும் கிடைக்கின்றது.
T20 உலகக் கிண்ண வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் தற்போது முதலிடத்தில் உள்ளார்.
சகிப் T20 உலகக் கிண்ணத்தில் இதுவரை 29 போட்டிகளில் ஆடி 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சகிப்பைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடி 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகளுடனும், இலங்கையின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க 31 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
>> T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மாயஜால தருணங்கள்
அதேபோல, பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல், இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் அஜந்த மெண்டிஸ் மற்றும் பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் ஆகியோர் T20 உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஐந்து வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
எனவே கிரிக்கெட் உலகிற்கு அண்மைக்காலமாக திறமையான பல பந்துவீச்சாளர்களை உருவாக்கிய பெருமை T20 கிரிக்கெட்டிற்கு உண்டு எனலாம். அந்த வகையில் கடந்த 2007 முதல் 2021 வரை நடைபெற்றுள்ள T20 உலகக் கிண்ணத் தொடர்களின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பற்றிய தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
2007 T20: உமர் குல் (பாகிஸ்தான்)
பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சில் மிரட்டியிருந்தார்.
குறித்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகளுடன் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக இந்திய அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவினாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் கௌதம் காம்பீர், யுவராஜ் சிங் மற்றும் எம்.எஸ் டோனி ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகள் அடங்கும்.
2009 T20: உமர் குல் (பாகிஸ்தான்)
தொடர்ந்து 2009இல் இங்கிலாந்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சில் மீண்டும் கலக்கிய உமர் குல், மீண்டும் 13 விக்கெட்டுகளுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக இடம்பிடித்தார். இதில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் அஜந்த மெண்டிஸை ஒரு விக்கெட்டினால் பின்தள்ளி அவர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அத்துடன், லீக் சுற்றில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இருப்பினும், 2007ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. எனினும், 2009இல் அந்த அணி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
>> T20 உலகக்கிண்ணத்தில் எதிரணிகளை மிரட்டிய இலங்கையின் நட்சத்திரங்கள்!
அதேபோல, உமர் குல் 2007 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு T20 உலகக் கிண்ணங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட பந்துவீச்சாளராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
2010 T20: டர்க் நானஸ் (அவுஸ்திரேலியா)
மேற்கிந்திய தீவுகளில் 2010இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவின் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் டர்க் நானஸுக்கு மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த தொடராக அமைந்தது.
குறித்த தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை அவர் பிடித்தார். இதில் பங்காளதேஷ் அணிக்கு எதிரான குழு நிலைப் போட்டியில் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவுஸ்திரேலியாவுக்காக 2009-2010 காலப்பகுதியில் வெறுமனே 17 T20 போட்டிகளில் டர்க் நானஸ் விளையாடியிருந்தாலும், 2010 T20 உலகக் கிண்ணத்தில இங்கிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது. எனினும், அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதில் டர்க் நானஸ் முக்கிய பங்காற்றினார்.
2012 T20: அஜந்த மெண்டிஸ் (இலங்கை)
இலங்கையின் மயாஜால சுழல் பந்துவீச்சாளரான அஜந்த மெண்டிஸ், 2012இல் இலங்கையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக இடம்பிடித்தார்.
குறித்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் T20 உலகக் கிண்ண அத்தியாயம் ஒன்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.
இதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். T20 உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சாளர் ஒருவரின் அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் அது இடம்பிடித்தது.
அதேபோல, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அஜந்த மெண்டிஸ் வீழ்த்தியிருந்தாலும், சொந்த மண்ணில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு சம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது.
>> T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி பலமானதா? இல்லையா?
எவ்வாறாயினும், T20 உலகக் கிண்ண வரலாற்றில் 21 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஜந்த மெண்டிஸ், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2014 T20: இம்ரான் தாஹிர் (தென்னாபிரிக்கா), அஹ்சன் மாலிக் (நெதர்லாந்து)
தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் மற்றும் நெதர்லாந்தின் அஹ்சன் மாலிக் ஆகியோர் 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் தலா 12 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதல் இடங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியை இம்ரான் தாஹிர் பதிவுசெய்ய, அதே போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய நெதர்லாந்து வீரர் அஹ்சன் மாலிங்க 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனினும், குறித்த போட்டியில் 6 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது.
எவ்வாறாயினும், குறித்த தொடரில் இந்தியாவுடனான அரை இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தோல்வியைத் தழுவியதுடன், இங்கிலாந்து அணியை வீழ்த்திய அனைவரது கவனத்தையும் ஈர்த்த நெதர்லாந்து அணி, குழுநிலை சுற்றுடன் வெளியேறியது.
2016 T20: மொஹமட் நபி (ஆப்கானிஸ்தான்)
கடந்த 2016இல் இந்தியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் நபி பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
குறித்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். ஆனால் சக நாட்டு வீரரான ரஷீத் கான் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு விக்கெட்டினால் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
எவ்வாறாயினும், 2016 T20 உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிரெண்டு இடங்களையும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களால் பெற்றுக் கொண்ட போதிலும், அந்த அணி சுபர் 10 சுற்றுடன் வெளியேறியது.
2021 T20: வனிந்து ஹசரங்க (இலங்கை)
இலங்கையின் லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்க, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
இதன்மூலம் T20 உலகக் கிண்ண அத்தியாயம் ஒன்றில் அதிக விக்கெட் வீழ்த்திய அஜந்த மெண்டிஸை பின்தள்ளி அவர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
சுபர் 12 சுற்றில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய அவர், T20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்த 3ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.
எனினும், குறித்த போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் தோல்வியைத் தழுவி சுபர் 12 சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
எவ்வாறாயினும், குறித்த தொடர் முழுவதும் வனிந்து ஹஸரங்க பந்துவீச்சின் மூலம் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<