சர்வதேச கிரிக்கெட்டை மிரட்டிய இலங்கை பந்துவீச்சாளர்கள்!

Sri Lanka Cricket

831

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னேற்றங்களுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக மாறியிருந்த விடயம் பந்துவீச்சில் இலங்கை அணிக்கு கிடைத்திருக்கும் பன்முகத்தன்மை.

கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்திலிருந்து இலங்கை அணியின் பந்துவீச்சு அதிகமாக பேசப்படுகின்றது. சுழல் பந்துவீச்சு மற்றும் வேகப் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச்சிறந்த வீரர்களை இலங்கை அணி கொண்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறந்த பிரதிகளை பதிவுசெய்திருந்தனர். இதில் இந்த ஆண்டு அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர்கள் தொடர்பில் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

>> வியாஸ்காந்த், பினுரவின் அசத்தலுடன் ஜப்னாவுக்கு முதல் வெற்றி

வனிந்து ஹஸரங்க – 44 விக்கெட்டுகள்

  • T20I – 34 விக்கெட்டுகள் | ஒருநாள் – 10 விக்கெட்டுகள்

நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க இந்த ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை அணிக்கு பந்துவீச்சில் மிகச்சிறந்த பலத்தை கொடுத்துவரும் இவர், இந்த ஆண்டு 24 இன்னிங்ஸ்களில் 44 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.Wanindu Hasaranga

வனிந்து ஹஸரங்க இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் மாத்திரம் இந்த 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐசிசி T20I தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் இவர், 19 T20I போட்டிகளில் 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள இவர் அதில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மஹீஷ் தீக்ஷன – 36 விக்கெட்டுகள்

  • T20I – 22 விக்கெட்டுகள் | ஒருநாள் – 09 விக்கெட்டுகள்  | டெஸ்ட் 5 விக்கெட்டுகள்

வனிந்து ஹஸரங்கவுக்கு அடுத்தப்படியாக இலங்கை அணிக்காக இந்த ஆண்டு அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளவர் மஹீஷ் தீக்ஷன. இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு பலத்துக்கு வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் முக்கிய காரணமாக உள்ளனர்.

மஹீஷ் தீக்ஷன இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் மாத்திரம் அதிகமாக விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார்.Maheesh Theekshana

T20I போட்டிகளில் 22 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டுள்ள இவர், 11 ஒருநாள் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், 2 டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மொத்தமாக 35 போட்டிகளில் இந்த ஆண்டு விளையாடியுள்ள மஹீஷ் தீக்ஷன 36 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> சர்வதேசத்தில் இந்த ஆண்டு பிரகாசித்த இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்!

பிரபாத் ஜயசூரிய – 29 விக்கெட்டுகள்

  • டெஸ்ட் – 29 விக்கெட்டுகள்

இலங்கை டெஸ்ட் அணிக்கான தன்னுடைய கனவு அறிமுகத்தை அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட பிரபாத் ஜயசூரிய, சர்வதேச கிரிக்கெட்டை ஈர்த்திருந்தார்.

காலியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இவர், இரண்டு இன்னிங்ஸ்களில் தலா 6 விக்கெட்டுகள் என முதல் போட்டியில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.Prabath Jayasuriya

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர் 17 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தமாக 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே இந்த ஆண்டு விளையாடிய இவர் ஒரு 10 விக்கெட்டுகள் மற்றும் மூன்று 5 விக்கெட்டுகள் குவிப்புடன் 29 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

பிரபாத் ஜயசூரியவின் இந்த அற்புதமான பந்துவீச்சின் உதவியுடன் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரை இலங்கை அணி 1-1 என சமப்படுத்தியும் இருந்தது.

சாமிக்க கருணாரத்ன – 24 விக்கெட்டுகள்

  • T20I – 10 விக்கெட்டுகள் | ஒருநாள் – 14 விக்கெட்டுகள்

வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தப்படியாக அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பவர் சாமிக்க கருணாரத்ன.

சகலதுறை வீரராக இருப்பதுடன் தனக்கு பந்துவீச்சில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பந்துவீச்சில் இவர் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தார்.

ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள இவர் விக்கெட்டுகளை கைப்பற்றாததுடன், 8 T20I போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும், 24 ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேநேரம் இந்த ஆண்டு மொத்தமாக 24 விக்கெட்டுகளை இவர் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் மஹேல ஜயவர்தன!

கசுன் ராஜித – 24 விக்கெட்டுகள்

  • T20I – 03 விக்கெட்டுகள் | ஒருநாள் – 07 விக்கெட்டுகள் | டெஸ்ட் – 14 விக்கெட்டுகள்

சுரங்க லக்மால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதை தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் கசுன் ராஜித மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விஷ்வ பெர்னாண்டோவின் தலையில் பந்து தாக்கியதன் காரணமாக மாற்று வீரராக கசுன் ராஜித அணிக்குள் வந்தார். அணிக்குள் வந்த இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை சாய்த்த இவர், அடுத்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில் விளையாடிய இவர், 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 3 ஒருநாள் போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும், 3 T20I போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர்களையடுத்து தனன்ஜய டி சில்வா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 22 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 20 விக்கெட்டுகளையும், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 19 விக்கெட்டுகளையும் இந்த ஆண்டு வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<