இன்று உலகம் முழுவதிலும் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உட்பட பல பிரீமியர் லீக் தொடருக்கு முன்னோடியாக T20 உலகக் கிண்ணம் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. எனவே, ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரின் 8ஆவது அத்தியாயம் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது,
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் சம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது.
T20 கிரிக்கெட் என்றாலே பந்துவீச்சாளர்களைப் பந்தாடும் துடுப்பாட்ட வீரர்கள் சிக்ஸர் மழை பொழிந்து ஓட்டங்களைக் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன T20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
அவர் 2007 முதல் 2014 வரை பங்கேற்ற 31 T20 போட்டிகளில் 39 என்ற சிறப்பான சராசரி விகிதத்தில் 1016 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன்மூலம் T20 உலகக் கிண்ண வரலாற்றில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் மற்றும் ஒரே துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
- T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி பலமானதா? இல்லையா?
- T20 உலகக்கிண்ணத்தில் எதிரணிகளை மிரட்டிய இலங்கையின் நட்சத்திரங்கள்!
- T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மாயஜால தருணங்கள்
மறுபுறத்தில் இதுவரை நடைபெற்றுள்ள T20 உலகக் கிண்ணத் தொடர்களில் அத்தியாயம் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி படைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் அவர் 319 ஓட்டங்களை எடுத்தார்.
அதேபோல, இதுவரை நடைபெற்று முடிந்துள்ள T20 உலகக் கிண்ணத் தொடர்களின் முடிவில் அத்தியாயம் ஒன்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இலங்கையைச் சேர்ந்த திலகரட்ன டில்ஷான் 2009 அத்தியாயத்திலும், மஹேல ஜயவர்தன 2010 அத்தியாயத்திலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களாக இடம்பிடித்தனர்.
எனவே, கடந்த 2007 முதல் 2021 வரை நடைபெற்றுள்ள T20 உலகக் கிண்ணத் தொடர்களின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
2007 – மெத்யூ ஹைடன் (அவுஸ்திரேலியா)
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மெத்யூ ஹைடன் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார். ஆறு போட்டிகளில் 88.33 என்ற சராசரி மற்றும் 144.80 என்ற ஓட்ட வேகத்தில் 265 ஓட்டங்களைக் குவித்தார். அதில் நான்கு அரைச் சதங்களும் அடங்கும். எனினும், மெத்யூ ஹைடன் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறிய போதிலும் அவுஸ்திரேலியாவால் குறித்த ஆண்டு சம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இந்தியாவுடனான அரை இறுதியில் 15 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியது. எனினும், குறித்த போட்டியிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அவர், அரைச் சதம் கடந்து 62 ஓட்டங்களை எடுத்தார்.
2009 – திலகரத்ன டில்ஷான் (இலங்கை)
கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடம் பிடித்தார்.
குறித்த தொடரில் ஏழு போட்டிகளில் 52.83 என்ற சராசரி மற்றும் 144.74 என்ற ஓட்ட வேகத்தில் 317 ஓட்டங்களைக் குவித்த அவர், 3 அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்டார்.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி வீழ்த்தி சம்பியனாக மகுடம் சூடியது. குறித்த தொடர் முழுவதும் இலங்கைக்காக துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுத்து இலங்கை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்த டில்ஷான், இறுதிப் போட்டியில் மொஹமட் ஆமிரின் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
எவ்வாறாயினும், T20 உலகக் கிண்ணத் தொடர்களில் 35 போட்டிகளில் பங்கேற்று 897 ஓட்டங்களைக் குவித்துள்ள டில்ஷான், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 2007 – 2016 வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்ற அவரால் சதம் அடிக்க முடியாவிட்டாலும் 6 அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
2010: மஹேல ஜயவர்தன (இலங்கை)
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 3ஆவது T20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார்.
குறித்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 302 ஓட்டங்களைக் குவித்த அவர், ஒரு சதம் மற்றும் 2 அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்டார். இதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 10 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 64 பந்துகளில் சதம் அடித்து T20 உலகக் கிண்ணத்தில் சதமடித்த முதல் இலங்கை வீரராக பதிவானார்.
எவ்வாறாயினும், 2010 T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை அரை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதில் மஹேல ஜயவர்தன முக்கிய பங்கு வகித்தார்.
2012: ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா)
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப வீரர் ஷேன் வொட்சன் 2012இல் இலங்கையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார்.
குறித்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 அரைச் சதங்களுடன் 249 ஓட்டங்களை அவர் குவித்தார். அதேபோல பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
>> T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
இதில் சிறப்பம்சம் என்னவெனில் மஹேல ஜயவர்தன 243 ஓட்டங்களைக் குவித்து 6 ஓட்டங்களினால் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
எவ்வாறாயினும், 2012 T20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியைத் தழுவியால் இறுதிப் போட்டி வாய்ப்பை தவறவிட்டது.
இருப்பினும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடாத அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர சகலதுறை வீரரான ஷேன் வொட்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2014: விராட் கோஹ்லி (இந்தியா)
பங்களாதேஷில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி இன் 5ஆவது T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, 319 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடித்தார்.
குறித்த தொடரில் அதிர்ச்சியூட்டும் விதத்தில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அவர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டி மற்றும் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரைச் சதங்களைப் பதிவு செய்தார். எனினும் இறுதிப் போட்டியில் இலங்கையிடம் இந்திய அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
சச்சினுக்கு அடுத்து இந்தியாவின் Run Machine என்று அழைக்கப்படும் விராட் கோஹ்லி 2012 முதல் 2021 வரை T20 உலகக் கிண்ணத் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் தலைவராக விராத் கோஹ்லி செயல்பட்ட போதிலும், அவரால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியாமல் போனது.
எவ்வாறாயினும், 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியா எடுத்த 130 ஓட்டங்களில் விராட் கோஹ்லி மட்டும் தனி ஒருவராக 77 ஓட்டங்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார். அதேபோல 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவினாலும், விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைக் குவித்து மீண்டும் இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார்.
இதன் காரணமாக விராட் கோஹ்லி 2014 மற்றும் 2016 ஆகிய T20 உலகக் கிண்ணத் தொடர்களில் தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனையும் படைத்துள்ளார்.
மேலும், T20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ள அவர், ஒட்டுமொத்த வீரர்கள் வரிசையில் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
2016: தமிம் இக்பால் (பங்களாதேஷ்)
2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார்.
குறித்த தொடரில் ஆறு போட்டிகளில் 73.75 என்ற சராசரி மற்றும் 142.51 என்ற ஓட்ட வேகத்தில் 295 ஓட்டங்களை அவர் குவித்தார். இதில் குழு நிலைப் போட்டியில் ஓமானுக்கு எதிராக சதம் ஒன்றையும் விளாசினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பங்களாதேஷ் அணி சுபர் 10 சுற்றுடன் வெளியேறியது.
2021: பாபர் அசாம் (பாகிஸ்தான்)
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரைப் பின்தள்ளி, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் இடம்பிடித்தார்.
குறித்த தொடரில் ஆறு போட்டிகளில் 303 ஓட்டங்களை 60.60 என்ற சராசரியுடன் குவித்த அவர், 126.25 ஓட்ட வேகத்தையும் தக்க வைத்துக் கொண்டார். மேலும் கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் 4 அரைச் சதங்களையும் பாபர் அசாம் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<