உலகக் கிண்ணத்தில் ஓட்ட இயந்திரமாக ஜொலித்த நட்சத்திரங்கள்

281

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இங்கிலாந்து பக்கம் திரும்பியுள்ளது. உலகக் கிண்ணத் தொடரில் தங்களுக்கு விருப்பமான அணி எப்படி விளையாடப் போகிறது, எந்தெந்த வீரர்கள் பிரகாசிக்கப் போகின்றார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், உலகக் கிண்ணத்துக்கு முன் ஆயத்தமாக இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் படையெடுத்து பயிற்சிப் போட்டியாக ஒருசில ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

துடுப்பாட்டத்துக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் இவ்வனைத்து அணிகளையும் சேர்ந்த வீரர்கள் சரமாரியாக ஓட்டங்களைக் குவித்து தமது ஆட்டத் திறமையை நிரூபித்து வருகின்றனர். ஏன் முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்க காத்திருக்கும் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 350 ஓட்டங்களையும் துரத்தியடித்து தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.  

ஸ்கொட்லாந்துக்கெதிரான போட்டியுடன் தன்னம்பிக்கை பெற்றுள்ள திமுத்

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நேற்று (21) நடைபெற்ற ஒருநாள்…..

இவ்வாறு இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் 350 முதல் 400 வரையான ஓட்டங்களைக் குவிக்கின்ற திறமை இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள பெரும்பாலான அணிகள் வசம் இருப்பதை நாம் நன்கு அறிவோம். எனவே, வீரர்களின் ஓட்ட மழையில் இம்முறை உலகக் கிண்ணம் நனைந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இந்த நிலையில், சுமார் 46 வருடகால உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்களைக்கு குவித்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் எந்த வீரராலும் நெருங்க முடியாத வகையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அவரை முந்துவதற்கு தற்போதுள்ள வீரர்களில் எவருக்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ஒருவராக குறித்த பட்டியலில் இணைந்து கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள ஒருசில வீரர்களுக்கு கிடைக்கவுள்ளது.  

எனவே, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் (மே மாதம்) 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 12 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் குறித்த ஆய்வை இங்கு பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

இந்தியாவின் கிரிக்கெட் கடவுளில் ஒருவராக அந்நாட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 6 உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார். கடந்த 1992, 1996, 1999, 2003, 2007 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் அவர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

அதிகம் பேசப்படாத இலங்கையின் நாயகன் டில்ஹார பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கெட் அணி இப்போது பலராலும்……

இதன்படி, மொத்தமாக 45 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், 88.98 சதவீத துடுப்பாட்ட சராசரியுடன் 2, 278 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 6 சதங்கள் மற்றும் 15 அரைச் சதங்கரளை குவித்துள்ள அவர், 241 பௌண்டரிகளையும், 27 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். அத்துடன், 2003இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் நமீபியா அணிக்கெதிராக 152 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.


ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணியின் வெற்றி நாயகனாகவும், தலைவராகவும் விளங்கிய ரிக்கி பொண்டிங், உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 2ஆவது இடத்தில் உள்ளார். 1996 முதல் 2011 வரை ஐந்து உலகக் கிண்ணத் தொடர்களில் வினையாடியுள்ள அவர், 46 போட்டிகளில் களிமிறங்கி 1,743 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் பொண்டிங்கின் துடுப்பாட்ட சராசரி 79.95 ஆகும். உலகக் கிண்ணத்தில் 5 சதங்கள், 6 அரைச் சதங்களைக் குவித்துள்ள பொண்டிங், 145 பௌண்டரிகளையும், 31 சிக்ஸர்ளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அத்துடன், அவுஸ்திரேலிய அணிக்காக 3 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள பொண்டிங், 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் அந்த அணியின் தலைவராகச் செயற்பட்டு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இதில், 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 140 ஓட்டங்களைக் குவித்து தனது அதிகபட்ச ஓட்டத்தையுப் பதிவுசெய்திருந்ததுடன், அவ்வணிக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்தார்.  


குமார் சங்கக்கார (இலங்கை)

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தில் உள்ளார். உலகக் கிண்ணத்தில் குறைவான போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அபார துடுப்பாட்டத்தினால் ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் அவர் குவித்துள்ளார்.

2003 முதல் 2015ஆம் ஆண்டு வரையான 4 உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ள சங்கக்கார, 37 ஆட்டங்களில் 5 சதங்கள், 7 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 1532 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரின் துடுப்பாட்ட சராசரி 86.26 ஆகும். அத்துடன், உலகக் கிண்ணத்தில் 147 பௌண்டரிகளையும், 14 சிக்ஸர்களையும் விளாசியுள்ள அவர், 124 ஓட்டங்களை அதிகபட்சமாகக் குவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் அதிக சதங்களை அடித்த வீரர்களில் 2ஆவது இடத்தில் உள்ள சங்கக்கார, 2 தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும், ஒரு தடவை உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியிலும் விளையாடியிருந்தார்.  

இறுதியாக, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் 7 போட்டிகளில் விளையாடி 574 ஓட்டங்களைக் குவித்த சங்கக்கார, 4 சதங்களை தொடர்ச்சியாகக் குவித்து உலக சாதனை படைத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்)

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிங்கம் என வர்ணிக்கப்படும் பிரையன் லாரா இந்த வரிசையில் 4ஆவது இடத்தில் உள்ளார். உலக கிரிக்கெட் அரங்கிலிருந்து லாரா ஓய்வு பெற்று 12 வருடங்கள் கடந்தும் அவருடைய இடத்தை இதுவரை எந்தவொரு வீரராலும் நெருங்க முடியவில்லை.

இடதுகை துடுப்பாட்ட வீரரான லாரா, 1992ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக் கிண்ண தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 34 ஆட்டங்களில் 2 சதங்கள், 7 அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்ட அவர், 1,225 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

2003 மற்றும் 2007 உலகக் கிண்ண தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராகச் செயற்பட்ட லாரா, உலகக் கிண்ணத்தில் 116 ஓட்டங்களை அதிகபட்சாமகப் பெற்றுக்கொண்டுள்ளார். இதில் 124 பௌண்டரிகளையும், 17 சிக்ஸர்களையும் அவர் விளாசியுள்ளார்.

உலகக் கிண்ண ஆட்ட நாயகர்களாக அதிகம் வலம்வந்த நட்சத்திர வீரர்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 1877ஆம் ஆண்டு…..


ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னாள் தலைவருமான ஏபி டி வில்லியர்ஸ், உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 5ஆவது இடத்தில் உள்ளார். 2007 முதல் 2015 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற 3 உலகக் கிண்ணப் தொடர்களில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ், 23 ஆட்டங்களில் 1,207 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதில் 121 பௌண்டரிகளும், 37 சிக்ஸர்களும் அடங்கும். 117.29 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்ட அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 162 ஓட்டங்களாகும். இந்த சராசரியானது அவர் உலகக் கிண்ணத்தில் முழுமையாக சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்தார் என்பதற்கு சிறந்த சான்றாக உள்ளது.

இதேவேளை, குறித்த பட்டியலில் அடுத்த ஐந்து இடங்களில் சனத் ஜயசூரியா ( 1165 ஓட்டங்கள்இலங்கை), ஜெக் கலீஸ் (1148 ஓட்டங்கள்தென்னாபிரிக்கா), திலகரத்ன டில்ஷான் (1112 ஓட்டங்கள்இலங்கை), மஹேல ஜயவர்தன (1100 ஓட்டங்கள்இலங்கை) மற்றும் அடெம் கில்கிறிஸ்ட் (1085 ஓட்டங்கள்அவுஸ்திரேலியா) உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<