உலகக் கிண்ண ஆட்ட நாயகர்களாக அதிகம் வலம்வந்த நட்சத்திர வீரர்கள்

426

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 1877ஆம் ஆண்டு ஆரம்பமாகியதுடன், ஒருநாள் போட்டிகள் 1971ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அதாவது, சுமார் 100 வருடங்களுக்குப் பிறகுதான் ஒருநாள் போட்டிகள் ஆரம்பமாகியதாக வரலாறுகள் கூறுகின்றன.

அந்த வரிசையில் தற்போது டி-20 போட்டிகள் மற்றும் டி-10 போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருவதுடன், அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது. எனவே, காலத்தின் மாற்றத்திக்கு ஏற்ப கிரிக்கெட் போட்டிகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் இடம்பெற்றாலும், கிரிக்கெட் விளையாட்டுக்கான வரவேற்பு இன்னும் குறையவில்லை.

ஸ்கொட்லாந்துடனான இறுதி வாய்ப்பை பயன்படுத்துமா இலங்கை?

உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி ………………

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பமும், பின்னணியும் சுவாரஷ்யமானது. 1971ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. ஐந்தாவதும், இறுதியும் நாளில் வானம் தெளிவாக இருந்தது. இதனால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்க இரு அணிகளும் தலா 60 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடின.

ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசப்பட்டன. இதுதான் கிரிக்கெட் வரலாற்றில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியாகும். இதன்பிறகு ஒருநாள் போட்டிகள் பிரபல்யம் அடைய உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்த பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது.

இதன் பிரதிபலனாக சர்வதேச ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 1975ஆம் ஆண்டு (ஜூன் 7ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை) உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து தங்கள் நாட்டில் நடத்தியிருந்தது.

ஒரு ஓவருக்கு 6 பந்துகளாக 60 ஓவர்கள் அடிப்படையில் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் டெஸ்ட் போட்டி போன்று வெள்ளை நிற சீருடையுடன் விளையாடினார்கள்.

அத்துடன், போட்டியில் கலந்துகொண்ட 8 அணிகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, கிழக்கு ஆபிரிக்கா அணிகள்பிரிவிலும் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள்பிபிரிவிலும் இடம்பெற்றதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் புதிய புதிய மாற்றங்களும், விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 60 ஓவர்களாக விளையாடப்பட்டு வந்த உலகக் கிண்ணப் போட்டிகள் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. வண்ண உடையில், வெள்ளை நிறப் பந்து, ஒளி வெள்ளத்தில் பகலிரவு போட்டிகள் என பல்வேறு புதுமைகளுடன் உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகள் மாற்றம் பெற்றன. அதன்பிறகு டி-20 போட்டிகளின் அறிமுகமும், அதன் கட்டமைப்புகளும் கிரிக்கெட் உலகில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், 44 வருடங்கள் பழைமை வாய்ந்த உலகக் கிண்ணப் போட்டிகள் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டுள்ளது என்றால் மிகையாகாது.

உலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணிக்கு மறக்க முடியாத இணைப்பாட்டங்கள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களை ……………..

உலகக் கிண்ணப் போட்டிகளில் தமது நாட்டுக்காக விளையாட வேண்டுமென்பதே கிரிக்கெட் விளையாடுகின்ற அனைத்து வீரர்களினதும் வாழ்நாள் கனவாகும். அதேபோல, உலகக் கிண்ணத்தில் தமது நாட்டுக்காக விளையாடுவது மாத்திரமல்லாது அந்த உலகக் கிண்ணத்தையே வெற்றியீட்டிக் கொடுப்பதில் ஒரு பங்குதாரராக இருப்பதும் அந்த வீரர்களின் மற்றுமொரு எதிர்பார்பார்ப்பாகும்.

எனவே, இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பிரகாசித்து அதிக தடவைகள் போட்டியின் ஆட்டநாயகானத் தெரிவாகிய வீரர்கள் பற்றி தொகுப்பை இந்த கட்டுரை ஆராயவுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்த இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் உலகக் கிண்ணத்திலும் தனி முத்திரை பதித்தார். உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள சச்சின், அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரராகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றார். இந்தியாவுக்கு 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 தடவைகள் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2003இல் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 98 ஓட்டங்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியின் முதல் ஓவரில் சொஹைப் அக்தரின் பந்துக்கு ஒரு இமாலய சிக்சர், அதன்பின் அடுத்தடுத்து பௌண்டரிகள் அடித்திருந்தார். இவரது அபார ஆட்டத்தால் இந்தியா அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியதுடன், குறித்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.

இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக 673 ஓட்டங்களை சச்சின் குவித்திருந்ததுடன், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். 2007 உலகக் கிண்ணத்தில் பிரகாசிக்கத் தவறிய சச்சின், 2011இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்ததுடன், பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதி ஆட்டத்திலும் அரைச் சதம் கடந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

நாட்டில் வன்முறை வேண்டாம்: கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்……….

2011இல் தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியிருந்த சச்சின், இலங்கை அணியுடனான இறுதிப் போட்டியில் பிரகாசித்தத் தவறினாலும், உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பெருமையோடு விடைபெற்றார்.

கிளென் மெக்ராத் (அவுஸ்திரேலியா)

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு வித்திட்டவர்களில் கிளென் மெக்ராத் முக்கிய இடத்தை வகிக்கின்றார். 1996ஆம் ஆண்டு முதல்முறையாக உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்கிய மெக்ராத் 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

அதன்பிறகு 1999இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அசுர வேகத்தில் மிரட்டினார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரையன் லாரா உள்ளிட்ட 5 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் அவுஸ்திரேலிய அணி சம்பியனாகவும் தெரிவாகியது.

இந்த தொடரில் 10 ஆட்டங்களில் விளையாடிய அவர், 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த மெக்ராத், நமீபியா அணியுடனான போட்டியில் 15 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கிண்ண அரங்கில் ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் பெற்றுக்கொண்டார்.

பின்னர், 2003இல் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் அசத்திய மெக்ராத், 21 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஒருமுறை அவுஸ்திரேலியாவும் சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க காரணமாக இருந்தார். தொடர்ந்து 2007 உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை (26) கைப்பற்றிய இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அவுஸ்திரேலிய அணியின் வேகப் புயல் கிளென் மெக்ராத், உலகக் கிண்ணத்தில் ஆறு தடவைகள் ஆட்டநாயகன் விருதுகளை வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

லான்ஸ் குளூஸ்னர் (தென்னாபிரிக்கா)

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென்னாபிரிக்காவின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக லான்ஸ் குளூஸ்னர் விளங்குகிறார். 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் சகலதுறையிலும் பிரகாசித்த அவர் ஐந்து தடவைகள் ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஒரு கட்டத்தில் 115 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், இக்கட்டான தருணத்தில் களமிறங்கிய குளூஸ்னர், அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தார்.

குறித்த போட்டியில், தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 199 ஓட்டங்களை எடுத்தது. அதேபோல பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 110 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் பிரகாசித்த குளூஸ்னர், 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

அதே உலகக் கிண்ணத்தில் கென்ய அணிக்கெதிரான போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், ஆட்டநாயகன் விருதுடன் தென்னாபிரிக்க அணிக்கு மற்றுமொரு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.

அதேபோல, 2003 உலகக் கிண்ணத்திலும் கென்ய அணியுடன் நடைபெற்ற போட்டியில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குளூஸ்னர், போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

கிரிக்கெட் உலகில் 360 பாகை என அழைக்கப்படுகின்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ், தனது அபரிமிதமான துடுப்பாட்டத் திறமையால் கிரிக்கெட் உலகின் அனைத்து ரசிகர்களினதும் மனதில் இடம்பிடித்த நட்சத்திர வீரராவார்.

1999 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவின் லான்ஸ் லோரன்ஸ் அதிகளவு ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுக் கொண்டாலும், டிவில்லியர்ஸ் 2003 முதல் 2011 வரை நடைபெற்ற மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளிலும் குறைந்தபட்சம் ஒரு ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய டி வில்லியர்ஸ், 130 பந்துகளில் 146 ஓட்டங்களைக் குவித்து தனது முதலாவது ஆட்டநாயகன் விருதினை வென்றார். எனினும், டி வில்லியர்ஸின் சதத்தின் உதவியுடன் 356 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்கா அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதேநேரம், உலகக் கிண்ணப் போட்டிகளில் 5 தடவைகள் ஆட்டநாயகன் விருதுகளை டி வில்லியர்ஸ் தட்டிச் சென்றுள்ளார். இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற வெவ்வேறு உலகக் கிண்ணப் போட்டிகளில் சதமடித்து அசத்திய அவர், அவ்வணிக்கு எதிராக மாத்திரம் 3 தடவைகள் ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதில், 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து விளாசிய டி வில்லியர்ஸ், ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 150 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

குறித்த போட்டியில் 66 பந்துகளில் 162 ஓட்டங்களைக் குவித்த அவர், போட்டியின் ஆட்ட நாயனாகத் தெரிவானார். அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 408 ஓட்டங்களைக் குவித்த தென்னாபிரிக்கா அணி, 257 ஓட்டங்களால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.

சனத் ஜயசூரிய (இலங்கை)

கிரிக்கெட் அரங்கில் சுழல் பந்துவீச்சாளராக களமிறங்கிய சனத் ஜயசூரிய, போகப்போக அதிரடி ஆட்டக்காரராக அவதாரம் எடுத்தார். 1989இல் இலங்கை அணியில் அறிமுகமான அவர், இந்திய துணைக்கண்டத்தில் 1996இல் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் கலக்கியிருந்தார்.  

IPL தொடரில் குறைந்த விலையில் பிரகாசித்த வீரர்கள்

இந்தியன் ப்ரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 12ஆவது…….

இங்கிலாந்துக்கு எதிராக காலிறுதியில் 44 பந்துகளில் 82 ஓட்டங்களைக் குவித்த அவர், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் சச்சின், அஜய் ஜடேஜா, சன்ஜே மன்ஜேக்கர் உள்ளிட்ட மூவரையும் வெளியேற்றி இலங்கை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர், 221 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.  

அத்துடன், குறித்த தொடரில் இரண்டு தடவைகள் அரைச் சதங்களைக் குவித்த சனத் ஜயசூரியவுக்கு ஆட்ட நாயகன் விருதுகள் கிடைத்தன.

அவுஸ்திரேலிய அணியுடனான இறுதிப் போட்டியில் சனத்துக்கு எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாடிவிட்டாலும், முன்னதாக நடைபெற்ற 5 குழு நிலை ஆட்டங்களிலும் இலங்கை அணியை வெற்றிபெறச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)

20ஆம் நூற்றாண்டின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களாக விளங்கிய சேர் டொன் பிரெட்மெண், சேர் கார்பீல்ட் சோபர்ஸ், சேர் ஜெக் ஹோப்ஸ் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோருடன் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸும் முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அவர், 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அவ்வணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.  

1975 உலகக் கிண்ணப் போட்டியில் எந்தவொரு ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுக்கொள்ளாத ரிச்சர்ட்ஸ், 1979ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துடனான இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து ஆட்டநாயகன் விருதுடன், உலகக் கிண்ணத்தையும் மேற்கிந்திய தீவுகள் அணிக்குப் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கையின் உலகக் கிண்ண நாயகன் – சனத் ஜயசூரிய

மிக வேகமாக ஓட்டங்கள் குவிக்கப்படும் ……..

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ், கொளிச்சரண் மற்றும் அணித் தலைவர் கிளைவ் லோய்ட் உள்ளிட்ட வீரர்களை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறியது. 99 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக விளையாடிய ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டார்.

சதம் கடந்த அவர், 138 ஓட்டங்களை (11 பௌண்டரி, 3 சிக்ஸர்) பெற்று வலுச்சேர்த்தார். இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 287 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

கிரஹம் கூச் (இங்கிலாந்து)

கடந்த 1979 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 286 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் போட்டியைப் போல மந்தமான ஆட்டத்தை ஆரம்பம் முதல் கடைபிடித்தனர். இதனால் அந்த அணிக்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக, முதல் விக்கெட்டுக்காக 38 ஓவர்களில் 129 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்டது. எனினும், 2ஆவது விக்கெட்டுகாகக் களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடிய கிரஹம் கூச் 28 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 183 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது. எனினும். மேற்கிந்திய தீவுகளின் அபார பந்துவீச்சினால் 11 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.

உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில் சங்கக்கார

ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு ……..

எனவே, இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் போட்டியின் ஆட்டநாயகன் விருது கிரஹம் கூச்சுக்கு கிடைத்திருக்கும். எனினும், முன்னதாக அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற லீக் போட்டியில் அரைச் சதம் அடித்து இங்கிலாந்து அணிக்க வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்த கிரஹம் கூச்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 1983 உலகக் கிண்ணப் போட்டியில் கிரஹம் கூச் விளையாடவில்லை. ஏனெனில் குறித்த காலப்பகுதியில் தென்னாபிரிக்காவுடனான சுற்றுப்பயணத்தின் போது கிளர்ச்சியை ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு 3 வருடங்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு 1987 உலகக் கிண்ணத்தில் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பிய அவர், தொடர்ச்சியாக 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தினார். இதில் இந்தியாவுடனான அரையிறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதும் அடங்கும்.

குறித்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய கூச், 115 ஓட்டங்களைக் குவிக்க இங்கிலாந்து அணி 254 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 219 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதேநேரம், 1992ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் கடைசியாக விளையாடிய கிரஹம் கூச் எந்தவொரு ஆட்டநாயகன் விருதையும் வெற்றி கொள்ளவில்லை.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<