மேற்கிந்திய தீவுகளை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பங்களாதேஷ்

227
Image courtesy - ICC

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் அரைச்சதம் அடித்து கைகொடுக்க, பந்துவீச்சில் அணித் தலைவர் மஷ்ரபி மொர்டசா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அபாரம் காட்ட, டாக்காவில் இன்று (09) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி இலகு வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

>> இலங்கை அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நியமனம்

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டாக்காவின் ஷெர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த அணியின் கிரன் பவெல், ஷாய் ஹோப் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். பங்களாதேஷ் அணி ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் மிரட்டியது. முதலாவது விக்கெட்டாக கிரன் பவெல் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய டெரன் பிராவோ 19 ஓட்டங்களுடனும், மார்லன் சாமுவேல்ஸ் 25, சிம்ரான் ஹெட்மியர் 6 ஓட்டங்களுடனும் வெளியேற, அந்த அணி 93 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை குறைவடைந்து.

பின்னர் வந்த ரொஸ்டன் சேஸ் 32, கீமோ போல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான், மஷ்ரபி மொர்டசா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் களமிறங்கினர். தமிம் இக்பால் 12 ஓட்டங்களுடனும், லிட்டன் தாஸ் 41 ஓட்டங்களுடனும், இம்ருல் கைஸ் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீம் பொறுப்பாக விளையாடி அரைச் சதம் குவித்தார். அவருக்கு சகிப் அல் ஹசன் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். சகிப் அல் ஹசன் 30 ஓட்டங்களுடனும், சௌம்யா சர்க்கார் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பங்களாதேஷ் அணி, 35.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை அணித் தலைவர் மஷ்ரபி மொர்டசா வென்றார்.

>> த்ரில்லர் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

இதன்படி, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என பங்களாதேஷ் அணி முன்னிலை வகிக்கிறது. இது இவ்வாறிருக்க, இவ்விரு அணிகளுக்கும்  இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (11) டாக்காவில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 195/9 (50) – ஷாய் ஹோப் 43, கீமோ போல் 36, ரொஸ்டன் சேஸ் 32, முஸ்தபிசூர் ரஹ்மான 35/3, மஷ்ரபி மொர்டசா 30/3

பங்களாதேஷ் – 196/5 (35.1) – முஸ்பிகுர் ரஹீம் 55*, லிட்டன் தாஸ் 41, சகிப் அல் ஹசன் 30, .ரொஸ்டன் சேஸ் 47/2

முடிவு – பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

ஆட்ட நாயகன் – மஷ்ரபி மொர்டசா

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<