உரிய நேரத்திற்குள் பந்துவீசாததன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் அதன் தலைவர் இயன் மோர்கனுக்கும் ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளதுடன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கும் தடை விதித்துள்ளது.
உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, குறித்த தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் ஒரு போட்டி கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் போன்றவற்றில் பங்கேற்கின்றது.
>>IPL இல் பிரகாசித்த பலர் இலங்கை ஏ அணியுடனான இந்திய அணியில்
டி20 போட்டி நிறைவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி அதனை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் அடுத்ததான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.
நேற்று (14) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும், ஐ.சி.சி இனுடைய சட்டங்களுக்கு அமைவாக செயற்படாததன் காரணமாக அணியின் தலைவர் இயன் மோர்கன் உட்பட ஏனைய பத்து வீரர்களுக்கும் ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.
மேலும், இயன் மோர்கனுக்கு ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடவும் ஐ.சி.சி தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாளை மறுதினம் (17) நொட்டிங்ஹமில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இவருக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. பந்துவீசிய இங்கிலாந்து அணியானது தங்களுக்கு பந்துவீசுவதற்காக வழங்கப்பட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்களினை குறைவாக வீசியிருந்தது. இதன் காரணமாக குறித்த இரு ஓவர்களையும் வீசுவதற்கு மேலதிக நேரம் தேவைப்பட்டிருந்தது.
ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22.1 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே ஒரு ஓவருக்கு வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் என்ற அடிப்படையிலும் குறித்த அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு அபராதம் என்ற அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டு ஓவர்களுக்கான கணக்காக அணியின் தலைவராக செயற்பட்ட இயன் மோர்கனுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீத அபராத தொகையும், போட்டியில் விளையாடிய ஏனைய பத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் என்ற அடிப்படையில் ஐ.சி.சி இனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி இனுடைய குறித்த சரத்தில் உள்ளடங்கும் விதிமுறைகளின் பிரகாரம் இவ்வாறு குறைந்தபட்ச வீதத்தில் பந்துவீச்சை மேற்கொள்ளும் அணியின் தலைவர் குறித்த அபராதம் விதிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு வருடங்களுக்குள், அதாவது 12 மாதங்களுக்குள் மீண்டுமொரு முறை அணித் தலைவராக இதேபோன்று குறைந்தபட்ச வீதத்திலான பந்துவீச்சு பிரதியை பதிவு செய்வாராயின் அவருக்கு போட்டித் தடை விதிக்கப்படும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் குறித்த சரத்துக்கு சான்றானதொரு சம்பவம் இப்போட்டியில் நிகழ்ந்துள்ளது. இவ்வருடம் (2019) பெப்ரவரி 22 ஆம் திகதி பார்படோஸில் நிறைவுக்கு வந்த இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டியின் போதும் குறைந்தபட்ச வீதத்திலான பந்து வீச்சு பிரதியை பதிவு செய்தார் என்ற காரணத்திற்காக அந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவராக செயற்பட்ட இயன் மோர்கனுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. எனவே, ஐ.சி.சி வழங்கிய எச்சரிக்கை காலம் ஆரம்பித்து வெறும் மூன்று மாதகால நிலையிலேயே இவ்வாறு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
>>அவிஷ்க குணவர்தனவின் இடத்தை நிரப்ப வரும் சமிந்த வாஸ்
குறித்த குற்றச்சாட்டானது போட்டியின் கள நடுவர்களான மிட்செல் கொஹ், போல் ரெப்பில் மற்றும் மூன்றாம் நடுவர் கிறிஸ் கெபானி ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட குறித்த போட்டியின் மத்தியஸ்தரான ரிச்சி ரிச்சர்ட்சன் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதமும், இயன் மோர்கனுக்கு போட்டித்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இயன் மோர்கனின் தடையால் நாளை மறுதினம் (17) நடைபெறவுள்ள போட்டிக்கு அணியின் தலைவராக ஜோ ரூட் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் உறுதுணையாக இருந்து சதமடித்து அசத்தி ஆட்ட நாயகன் விருதுவென்ற ஜொனி பெயர்ஸ்டோவுக்கு ஐ.சி.சி இனால் ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
ஜொனி பெயர்ஸ்டோ 128 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஜுனைட் கான் வீசிய 29ஆவது ஓவரின் 4ஆவது பந்துவீச்சில் பந்தானது துடுப்பு மட்டையில் பட்டு விக்கெட்டை (stump) தாக்கியது. இதனால் எட்ஜ் முறையில் ஆட்டமிழந்த இவர் கோபத்தில் துடுப்புமட்டையால் விக்கெட்டை நோக்கி ஓங்கி அடித்திருந்தார்.
இதன் காரணமாகவே இவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக இவ்வாறு தகுதி இழப்பீட்டு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையான போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதமும் இரண்டு தகுதி இழப்பீட்டு புள்ளிகளுமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<