இந்நாட்டின் விளையாட்டு துறைக்கு எதிர்கால நட்சத்திர வீர வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் வருடாந்தம் இடம்பெற்றுவரும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் 2018ஆம் ஆண்டுக்கான இறுதி நிகழ்வான தேசிய ரீதியான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பிரகாசித்த ஹார்ட்லி, மகாஜனா வீரர்கள்
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் தொடர்ந்து..
கிராமப் புறங்களில் கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை தேசிய மட்டத்தில் மிளிரச் செய்யும் நோக்கில் 1984ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிமுகம் செய்யப்பட்ட இப்பாடசாலைகள் விளையாட்டு விழா இம்முறை 34ஆவது தடவையாக நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களைப் போல இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 39 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் 498 தொழில்நுட்ப நடுவர்கள் கலந்துகொள்ளவுள்ள இம்முறை விளையாட்டு விழாவில் 36 வகையான மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன், சுமார் 6000 பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ள இம்முறை மெய்வல்லுனர் போட்டிகள் 12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், 34ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ள அதேநேரம், இறுதிநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 5ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடபெறவுள்ளன.
அத்துடன், இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் ஒலிம்பிக் சுடரை, மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட சம்பியனாக முடிசூடிய, அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற அங்குரம்பொட, வீரகெப்படிப்பொல தேசிய கல்லூரி மாணவன் அருண தர்ஷனவும், தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீராங்கனையான கண்டி, சுவர்ணமாலி மகளிர் கல்லூரி மாணவி அமாஷ டி சில்வாவும் எடுத்துச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுமுன்தினம் (25) மாலை கொழும்பிலுள்ள ஒலிம்பிக் இல்லத்தின் கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது.
அதில், இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,
கிரிக்கெட் துறையின் வீழ்ச்சியை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தினால் பாடசாலை மட்டத்திலாவது கிரிக்கெட் துறையை கட்டியெழுப்புவதற்காக நான் பிரபல கிரிக்கெட் வீரர்களை அழைத்ததுடன் என்னுடைய அழைப்பினை ஏற்று அவர்கள் எமது வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கிdர். எனினும், இலங்கை கிரிக்கெட் தற்போது பாரிய வீழ்ச்சியை நோக்கி தள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஒரு சிலரின் தேவையற்ற தலையீடுகளே பிரதான காரணமாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நீச்சல் வீரர் அகலங்க பீரிஸுக்கு கடந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் வைத்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பு வழங்கியது விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயாகும். எனினும், இந்த தீர்மானத்தை விமர்சிப்பதற்கு ஒரு சிலர் முயற்சித்த போதும் அதற்கு அச்சம் கொள்ளாமல் விளையாட்டு துறையின் நன்மைக்காக அந்த தீர்மானத்தை எடுத்தேன் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதேநேரம், ஒரு சில மாகாண சபைகளின் எதிர்ப்பின் காரணமாகவே 3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டடுள்ளதாகத் தெரிவித்த கல்வி அமைச்சர், குறித்த பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை துரிதமாக சேவையில் இணைப்பதற்கான அமைச்சரவை யோசனை அடுத்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைப்பேன் எனவும் இதன்போது தெரிவித்தார்.
இதில் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவின் ஆலோசகரான சுனில் ஜயவீர கருத்து வெளியிடுகையில், பின்னடைவை சந்தித்திருந்த பாடசாலை விளையாட்டு துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் தற்போதைய கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரமே 2015 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி அமைச்சு செயற்பட்டு வந்ததுடன், தற்போதைக்கு ஆசியாவின் மிகச்சிறந்த மெய்வல்லுனர் அணி இலங்கையிலேயே உள்ளது என தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவின் ஆலோசகர் சுனில் ஜயவீர மற்றும் கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடல் அப்பியாச கல்வி பணிப்பாளர் மஞ்சுல காரியவசம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<