ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் ஒற்றுமைக் கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கையும் மொங்கோலியாவும் மோதிக் கொண்டன. போட்டியின் இரண்டாம் பாதியில் நியமோசோர் நரன்போல்ட் பெற்றுக் கொடுத்த பெனால்டி கோல்களின் உதவியுடன் மொங்கோலிய அணி இலங்கை அணியை 2-0 என்ற வித்தியாசத்தில் தோற்கடித்ததுடன், அரையிறுதி வாய்ப்புக்களையும் தக்கவைத்துக் கொண்டது.
நரன்போல்ட் 50ஆவது மற்றும் 66 ஆவது நிமிடங்களில் பெற்றுக் கொடுத்த கோல்களின் மூலம் மொங்கோலிய அணி சுற்றுப்போட்டியில் தமது முதலாவது வெற்றியை சுவைத்தனர். இதன்படி புதன்கிழமை லாவோஸ் மற்றும் மொங்கோலியாவுக்கு இடையிலான போட்டியின் முடிவைப் பொறுத்து குழு ‘B’ இன் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொள்ளும் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வர். இப்போட்டி சமநிலையில் நிறைவடைந்தாலும் மொங்கோலியா அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவர்.
மக்காவு அணி குழுவின் முதல் இடத்தை உறுதி செய்து கொண்டதுடன், இலங்கை அணி சுற்றுத் தொடரிலிருந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இலங்கை மற்றும் மக்காவு அணிகள் புதன்கிழமை மோதவுள்ள போதிலும், இப்போட்டியின் முடிவு குழு நிலையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
பயனற்றுப் போன ரஹ்மானின் கோல் : இலங்கையை வீழ்த்தியது லாவோஸ்
இன்றைய போட்டியில் அதிகமான நேரம் பந்தின் கையிருப்பை மொங்கோலியா தக்கவைத்திருந்த போதிலும், இலங்கை அணிக்கே அதிகளவு வாய்ப்புக்கள் கிடைத்தன. எனினும் இரண்டு அணிகளும் கோல்களை பெறாத நிலையில் முதல் பாதி சமநிலையில் நிறைவுற்றது.
7 ஆவது நிமிடத்தில் நிபுண பண்டாரவின் உதையை எதிரணியின் கோல்காப்பாளர் பாட்சேகான் சிறப்பாக தடுத்ததுடன், 18ஆவது நிமிடத்தில் மொஹமட் ரிப்னாஸ் முற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை.
32ஆவது நிமிடத்தில் மொங்கோலியாவின் முன்கள வீரர்களும் கோல் வாய்ப்பொன்றை தவற விட்டதுடன், இடைவேளை நெருங்கும் போது இலங்கை வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் துரதிர்ஷ்டவசமாக அவர்களாலும் கோல் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
பண்டார மற்றும் சர்வானின் உதைகளும் இலக்கை தவறி கோல் கம்பத்தின் வெளியே சென்ற நிலையில் முதல் பாதி கோல்கள் இன்றி சமநிலையில் முடிவடைந்தது.
முதல் பாதி : இலங்கை 00 – 00 மொங்கோலியா
வாய்ப்புக்களை தவறவிட்ட இலங்கையின் வருத்தத்தை இரட்டிப்பாக்கிய மொங்கோலியா, இரண்டாம் பாதி ஆரம்பித்து 5ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்று போட்டியில் முன்னிலை பெற்றுக் கொண்டது.
நரன்போல்ட்டின் உதை பெனால்டி கட்டத்தினுள் வைத்து எடிசன் பிகுராடோவின் கையை உரசிய நிலையில், நடுவர் முஹம்மட் நஸ்மி நஸாருதீன் மொங்கோலிய அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கி தீர்ப்பளித்தார். இதன்போது கோல் காப்பாளர் சுஜான் பெரேராவை தாண்டி பந்தை உதைத்த நரன்போல்ட் தனது அணிக்கு முதல் கோலை இலகுவாக பெற்றுக் கொடுத்தார்.
முதல் கோல் பெறப்பட்டு 16 நிமிடங்களின் பின்னர், கோல் காப்பாளர் சுஜான் பெரேரா பந்தை தடுக்க முயன்ற போது எதிரணி வீரர் பாட்டுர் தவாஜவின் மீது மோதுண்டதை முறைதவறிய ஆட்டமாக தீர்ப்பளித்த நடுவர் மற்றுமொரு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். இம்முறையும் இலக்கை தவறாத நரன்போல்ட் மொங்கோலிய அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
அதன் பின்னர் இலங்கை அணி பல முயற்சிகளை மேற்கொணடும் அவற்றின் மூலம் எந்த பயனையும் அவர்களால் பெற முடியாமல் போனது. போட்டியின் இறுதி நேரங்களில் இலங்கை அணியினர் ஒரு அதிரடியான ஆட்டத்தை ஆடிய பொழுதும் அதன்மூலம் அவர்களால் பயனைப் பெற்நுக்கொள்ளவில்லை.
முழு நேரம் : இலங்கை 00 – 02 மொங்கோலியா