சூதாட்டம் தொடர்பாக இந்திய வீரர் பரபரப்பு புகார்

237

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இந்தியா வந்த அவுஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது.

ஒரு நாள் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்திய வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜை அணுகியிருக்கிறார். இது தொடர்பாக உடனடியாக சிராஜ், இந்திய கிரிக்கெட் சபையின் (பிசிசிஐ)-ன் ஊழல் தடுப்புப் பிரிவிற்கு (ACU) புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நபரை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர் என தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் பந்தயம் கட்டி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லா பணத்தையும் இழந்த நிலையில், மொஹமட் சிராஜை அணுகியிருக்கிறார். அவர், சிராஜிடம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளின் உள்ளக விடயங்களை தன்னிடம் சொன்னால் பெரிய தொகை பணம் தருவதாக கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து சிராஜ் அளித்த புகாரின் பேரில் அமலாக்க துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிராஜை தொடர்பு கொண்டவர் சூதாட்ட தரகர் அல்ல. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநரான இவர், போட்டிகளில் பந்தயம் கட்டுகிறார். அவர் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்தார். இதன் காரணமாக அவர் அணியைப் பற்றிய உள்ளக தகவல்களுக்கு சிராஜை தொடர்பு கொண்டார். இதுகுறித்து உடனடியாக சிராஜ் எங்களுக்கு தகவல் தெரிவித்தார் என்றார்.

ஏவ்வாறாயினும், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்து ஒரு மாதம் ஆன நிலையில், தற்போது இப்படியொரு செய்தி வெளியாகியிருப்பது கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான எஸ்.ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டார்கள்.. 2013ஆம் ஆண்டு மே மாதம் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக முன்னாள் சென்னை சுபர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதில் இருந்து பிசிசிஐ அதன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

ஐசிசி இன் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த மொஹமட் சிராஜ், தற்போது நடைபெற்று வருகின்ற IPL தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<