பாகிஸ்தான் T20I அணியிலிருந்து வெளியேறிய ரிஸ்வான்

New Zealand Tour of Pakistan 2024

185

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது T20i போட்டி இன்று (25) நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரரும், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ரிஸ்வான் மற்றும் இளம் துடுப்பாட்ட வீரர் முஹம்மத் இர்பான் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் T20i போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது T20i போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான மொஹமட் ரிஸ்வான் மற்றும் இளம் மத்திரய வரிசை துடுப்பாட்ட வீரர் முஹம்மத் இர்பான் கான் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான மூன்றாவது T20i போட்டியில், ரிஸ்வான் துடுப்பெடுத்தாடிய போது காலில் காயம் ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் 22 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதேபோல, இர்பான் கானுக்கும் காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதால் நியூசிலாந்துடனான எஞ்சிய T20i போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ எமது மருத்துவக் குழு மொஹமட் ரிஸ்வான் மற்றும் இர்பான் கானின் ஸ்கேன் அறிக்கைகளைப் பெற்றது. அந்த அறிக்கைகளை பகுப்பாய்வு செய்து, பாகிஸ்தான் அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னர், நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள T20i போட்டிகளில் இரு வீரர்களுக்கும் ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வீரர்களும் தங்கள் மறுவாழ்வுக்காக கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்று, அங்குள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த அறிக்கையில் மொஹமட் ரிஸ்வான் மற்றும் முஹம்மத் இர்பான் கான் ஆகிய இருவரது காயம் குறித்த எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, அசம் கானும் காயம் காரணமாக நியூசிலாந்துடனான எஞ்சிய T20i போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஹசிபுல்லா அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் ரிஸ்வான் மற்றும் இர்பானுக்குப் பதிலாக எந்தவொரு மாற்று வீரர்களும் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கெனவே பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில், தற்போது மொஹமட் ரிஸ்வான், முஹம்மத் இர்பான் கான் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில போட்டிகளில் இடம்பெறாமல் இருந்த பக்கர் ஸமான் மற்றும் சதாப் கான் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து தொடருக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி மே நடுப்பகுதியில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடுகிறது. அதன்பிறகு மே மாத இறுதியில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<