2021ஆம் ஆண்டின் ICC இன் சிறந்த T20 வீரரானார் ரிஸ்வான்

582
Mohamed Riswan

ஐசிசி இன் 2021ஆம் ஆண்டின் சிறந்த T20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வானும், சிறந்த T20 வீராங்கனையாக இங்கிலாந்தின் டெமி போமன்ட்டும் தெரிவாகியுள்ளனர்.

இதனிடையே, 2021இன் ஐசிசி இன் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை தென்னாபிரிக்காவின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜெனமன் மலானும், சிறந்த வளர்ந்துவரும் வீராங்கனைக்கான விருதை பாகிஸ்தானின் பாத்திமா சனாவும் வெற்றி கொண்டனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 வீர வீராங்கனைகளுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இதன்படி, 2021 ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை (23) முதல் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் T20 கிரிக்கெட்டில் 2021ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் மொஹமட் ரிஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொஹமத் ரிஸ்வான் 2021ஆம் ஆண்டில் 29 போட்டிகளில் பங்குபற்றி ஒரு சதம், 12 அரைச் சதங்கள் அடங்கலாக மொத்தம் 1,326 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவரது சராசரி 73.66ஆகவும் ஓட்ட வேகம் 134.89ஆகவும் அமைந்துள்ளது.

துடுப்பாட்டத்தைப் போல விக்கெட் காப்பிலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த அவர், 20 பிடியெடுப்புகள், 2 ஸ்டம்பிங்கள் அடங்கலாக 22 ஆட்டமிழப்புகளில் பங்களிப்பு செய்திருந்தார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக லாகூரில் கடந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற T20i போட்டியில் ரிஸ்வான் தனது கன்னி சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார்.

இதன்பிறகு, கராச்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 87 ஓட்டங்களை விளாசினார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தெடரின் முதல் லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 79 ஓட்டங்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

மேலும், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை அரை இறுதி வரை ரிஸ்வான் அழைத்துச் சென்றார். எனினும், தொடரின் முடிவில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 3ஆவது இடம்பிடித்தையும் அவர் பிடித்தார்.

கடந்த ஆண்டு T20 போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக இடம்பிடித்த அவர், 2000 ஓட்டங்கள் மைல்கல்லையும் எட்டி அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் விருது விழாவில், 2021இன் மிகவும் பெறுமதி வாய்ந்த வீரருக்கான விருதை மொஹமட் ரிஸ்வான் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, ஐசிசி இன் ஆண்டின் சிறந்த T20 வீராங்கனையாக இங்கிலாந்தின் டெமி போமன்ட் தெரிவானார். கடந்த வருடம் 9 T20 போட்டிகளில் 3 அரைச் சதங்கள் அடங்கலாக 303 ஓட்டங்களை போமன்ட் குவித்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, ஐசிசி இன் இணை உறுப்பு நாடுகளுக்கான ஆண்டின் சிறந்த வீரராக ஓமான் சகலதுறை வீரர் சீஷான் மக்சூத் தெரிவானார். இவர் 2021இல் 13 T20 போட்டிகளில் 31.60 என்ற சராசரியுடன் 316 ஓட்டங்களைக் குவித்ததுள்ளதுடன் 18.80 என்ற சராசரியுடன் 21 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், 2021இன் ஐசிசி இன் இணை உறுப்பு நாடுகளுக்கான சிறந்த T20 வீராங்கனையாக ஆஸ்திரியா வீராங்கனை அண்ட்றியா மாய் ஸெப்பீடா தெரிவானார்.

இவர் கடந்த வருடம் 8 T20 கிரிக்கெட் போட்டிகளில் 51.57 என்ற சராசரியுடனும் 102.55 என்ற ஓட்ட வேகத்துடனும் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்கலாக 361 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதேவேளை, 2021இன் ஐசிசி இன் வளர்ந்துவரும் வீரருக்கான விருதுக்கு தென்னாபிரிக்காவின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜெனமன் மலானும், சிறந்த வளர்ந்துவரும் வீராங்கனைக்கான விருதுக்கு பாகிஸ்தானின் பாத்திமா சனாவும் தெரிவாகியுள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<