சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஐசிசி T20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசீம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கோரிக்கைக்கு அமைய தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவரைப் பின்பற்றி நடப்பாண்டு பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளெடியேட்டர்ஸ் அணிக்காக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தேர்வுக்கு அவரை பரிசீலிக்க அந்நாட்டு தேர்வுக் குழுவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மொஹமட் அமீர் இறுதியாக 2020இல் இங்கிலாந்துக்கு எதிரான T20i போட்டியில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார். அந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மன உளைச்சல் மற்றும் அந்நாட்டு கிரிக்n;கட் சபையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வினை அவர் அறிவித்திருந்தார். அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு T20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வந்தார்.
தற்போது 31 வயதாகும் மொஹமட் அமீர், தனது சமூக வலைத்தள கணக்குகளில், ‘பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும் என்பது இன்னும் கனவு‘ என்று ஒரு குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.
எனவே மொஹமட் அமீர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமான மொஹமட் அமீர் இதுவரை, பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 T20i போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவெட்டா கிளெடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய மொஹமட் அமீர், 9 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<