முதல்தர கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனை

490
Mohammad Amir
Photo courtesy - Cricbuzz

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது கிரிக்கெட் வாழ்வில் புதிய இலக்கொன்றை எட்டியுள்ளார்.

மொஹமட் ஆமிர் முதற்தடவையாக இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் எசெக்ஸ் அணிக்காக பங்கேற்று விளையாடி வருகின்றார். இந்நிலையில், அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்தின் நெட்வெஸ்ட் டி20 போட்டித் தொடரிலும் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முதற்பிரிவு சுற்றுப் போட்டியில் யோக்ஷயார் அணியுடனான 4 நாள் போட்டியில் எசெக்ஸ் அணி சார்பாக இரு இன்னிங்ஸிலும் தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இலங்கை – பாகிஸ்தான் மோதும் பகலிரவு டெஸ்ட் விரைவில்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டுபாயில் நடத்துவதற்கு..

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் ஸ்காப்ரோவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யோக்ஷயார் அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. எசெக்ஸ் அணிக்காக அபார பந்துவீச்சை மேற்கொண்ட ஆமிர், 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய எசெக்ஸ் அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் 9ஆவது விக்கெட்டுக்காக அவ்வணியின் தலைவர் ரையன் டென் உடன் இணைந்து 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்ட ஆமிர், துடுப்பாட்டத்திலும் அசத்தி 22 ஓட்டங்களைப் பெற்றார்.

எனவே, 118 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய யேக்ஷயார் அணிக்கு ஆமிர் மீண்டும் நெருக்கடி கொடுத்தார். இதன் காரணமாக, 33 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு விளையாடிய எசெக்ஸ் அணி, 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியைப் பதிவு செய்தது.

இரண்டாவது இன்னிங்சிலும் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஆமிர், பாகிஸ்தான் அணிக்காக குறைந்தளவு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற மைல்கல்லையும் எட்டியதுடன், முதல்தரப் போட்டியொன்றில் 2ஆவது தடவையாக 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

தற்பொழுது 25 வயதாகும் ஆமிர் இதுவரை 51 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2009ஆம் ஆண்டு லாஹுர் அணிக்கெதிரான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தேசிய வங்கி அணிக்காக விளையாடி 97 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின் போது இடம்பெற்ற சூதாட்டத்தில் சிக்கிய ஆமிர் போட்டித் தடைக்குள்ளாகி சிறைத்தண்டனையையும் பெற்றார். இந்நிலையில், போட்டித் தடைக்குப் பின்னர் கடந்த வருடம் முதல் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடி வருகின்ற ஆமிர், அண்மையில் நிறைவுக்கு வந்த சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

ஆமிர் இதுவரையில் 28 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுக்களையும், 36 சர்வதேச ஒரு நாள் போட்டிளில் விளையாடி 54 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அது போன்றே, 31 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள அவர் 34 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.