இலங்கையின் இரும்பு மனிதராக மகுடம் சூடிய மொஹமட் அஸான்

100th National Athletics Championship

1113

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான டெகத்லன் (Decathlon) எனப்படுகின்ற 10 அம்சப் போட்டிகளில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் அஸான் 7,172 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் குறித்த போட்டிப் பிரிவில் 7,000 புள்ளிகளைக் கடந்த இரண்டாவது இலங்கை வீரராக சாதனை படைத்து அஸான் வரலாற்றில் இடம்பிடித்தார். முன்னதாக 2018ஆம் ஆண்டு டெகத்லன் தேசிய சம்பியனான அஜித் கருணாதிலக 7,355 புள்ளிகளை எடுத்து இலங்கை சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 2018ஆம் ஆண்டு முதல் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்ற டெகத்லன் போட்டி நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக பங்குகொண்டு வருகின்ற அஸான், தேசிய அளவில் தங்கப் பதக்கமொன்றை வெற்றி கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

10 வகைப் போட்டி நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக (100 மீற்றர், 110 மீற்றர் தடை தாண்டல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், குண்டு எறிதல், 400 மீட்டர், தட்டெறிதல், கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல், மற்றும் 1,500 மீட்டர்) நடைபெறுகின்ற ஆண்களுக்கான டெகத்லன் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

இதில் 100 மீட்டர் (11.31 செக். – முதலிடம்), நீளம் பாய்தல் (7.16 மீட்டர் – இரண்டாமிடம்), குண்டு எறிதல் (12.72 மீட்டர் – முதலிடம்), ஈட்டி எறிதல் (54.25 மீட்டர் – இரண்டாமிடம்), 1,500 மீட்டர் (4 நிடங்கள். 42.69 செக் – முதலிடம்), தட்டெறிதல் (38.43 மீட்டர் – முதலிடம்), கோலூன்றிப் பாய்தல் (4.30 மீட்டர் – முதலிடம்), 400 மீட்டர் (51.90 செக். – முதலிடம்), 110 மீட்டர் சட்டவேலி ஓட்டம் (14.90 செக். – முதலாமிடம்), உயரம் பாய்தல் (1.81 மீட்டர் – இரண்டாமிடம்)

ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு அஸான் திறமைகளை வெளிப்பத்தினார். இதன்படி, 7,172 புள்ளிகளை எடுத்து இம்முறை 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

கிழக்கு மாகாணம் நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அஸான், பாடசாலைக் காலத்தில் நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இறுதியாக, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டு நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் மாகாண மட்ட சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட பிறகு 2017ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவில் அஸான் இணைந்துகொண்டார். இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு புத்துயிர் கொடுத்து வருகின்ற ஒரே அமைப்பு தான் இலங்கை இராணுவம். இன, மத, மொழி வேறுபாடின்றி திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்ற இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட அஸான், நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளை கைவிட்டு மெய்வல்லுனர் போட்டிகளில் மிகவும் கடினமான போட்டி நிகழ்ச்சியான டெகத்லனை தெரிவுசெய்தார். அப்போது அஸானுக்கு 20 வயதாகும்.

100 மீட்டர், நீளம் பாய்தல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 1,500 மீட்டர், தட்டெறிதல், கோலூன்றிப் பாய்தல், 400 மீட்டர், 110 மீட்டர் சட்டவேலி ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல் என 10 வகையான போட்டி நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்தப் போட்டியை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில வீரர்கள் மாத்திரம் தான் தெரிவுசெய்வார்கள். இரண்டு நாட்களில் இடைவிடாது 10 போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுவது என்பது இலகுவான காரியமல்ல. இந்த விளையாட்டில் ஈடுபட உடல் வலிமையைப் போல மன வலிமை, தன்னம்பிக்கை மற்றும் பொறுமை இருக்க வேண்டும்.

அதேபோல, கிரிக்கெட் விளையாட்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சில் இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடிய, திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை சகலதுறை வீரர் என்பது போல, மெய்வல்லுர் விளையாட்டில் டெகத்லன் போட்டியில் ஈடுபடுகின்றவர்களை சகலதுறை வீரராக அல்லது இரும்பு மனிதராக அழைப்பார்கள்.

எனவே, தொடர்ச்சியான பயிற்சிகள், தொடர் உபாதைகள் என பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில், இலங்கையின் பிரதான மெய்வல்லுனர் தொடரான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 100ஆவது அத்தியாயத்தின் இரும்பு மனிதராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் அஸான் மகுடம் சூடியிருக்கிறார்.

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு வரலாற்றில் டெகத்லன் போட்டியில் இவ்வாறானதொரு திறமையை வெளிப்படுத்திய முதலாவது மற்றும் ஒரேயொரு வீரராக அஸான் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். அதேபோல, இலங்கையின் டெகத்லன் போட்டிகள் வரலாற்றில் தேசிய சம்பியனாக தெரிவாகிய முதல் தமிழ் பேசுகின்ற வீரரும் இவர் தான்.

இந்த வெற்றியை அடைவதற்கு மொஹமட் அஸான் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்த்தால், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டியில் முதல் முறையாக களமிறங்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். டெகத்லன் போட்டியில் அஸான் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

அதே ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் இராணுவ மெய்வல்லுனர் தொடர்களில் பங்குகொண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற அவர், இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தேசிய குழாத்தில் முதல் முறையாக இடம்பிடித்து அசத்தினார்.

இதனிடையே, 2019ஆம் ஆண்டு உபாதையினால் பாதிக்கப்பட்ட அஸானுக்கு தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. எனினும், உபாதையிலிருந்து பூரண குணமடைந்து ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் தேசிய மட்டப் போட்டிகளில் அவர் களமிறங்கினார். இதில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியளன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், அதே ஆண்டு நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

எனவே, டெகத்லன் போட்டியில் தொடர்ச்சியாக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வந்த அஸான், முதல் முறையாக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனரில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தக்கவைத்துக் கொள்கின்ற வாய்ப்பு அஸானுக்கு கிட்டியது. அதுவும் டெகத்லன் போட்டிகளில் இலங்கையின் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற அஜித் கருணாதிலகவை 2 போட்டி நிகழ்ச்சிகளில் வீழ்த்திய அவர், ஒட்டுமொத்தத்தில் 7 போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து 7,000 புள்ளிகளைக் கடந்த ஒரு வரலாற்று சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

எனவே, மிகப் பெரிய போரட்டத்துக்கு மத்தியில் பல வலிகளுடன் மிகவும் கடினமான ஒரு பாதையை கடந்த வந்த அஸான், இன்று இலங்கையின் இரும்பு மனிதராக மாறிவிட்டார்.

திறமை இறைவன் தந்த பரிசு. ஆனால் கடின உழைப்பால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்பதை இன்று அஸான் நிரூபித்துக் காட்டியுள்ளார். அதேபோல, தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் மாத்திரம் தான் எப்போதும் வெற்றியைத் தரும் என்பதையும் அஸாம் உண்மைப்படுத்தியுள்ளார்.

அதேபோல, அஸானின் திறமையை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த அவரது பயிற்சியாளர்களையும் கட்டாயம் ஞாபகப்படுத்த வேண்டும். அவரது பாடசாலை காலத்தின் போது பயிற்சியாளராக அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்சியாளரான தாஜுதீன் செயல்பட்டிருந்ததுடன், தற்போதைய பயிற்சியாளராக ரோஹித பெர்னாண்டோ செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, மொஹமட் அஸானின் வெற்றிகள் தொடர வேண்டும், மிக விரைவில் இலங்கை சாதனையை முறியடிக்க இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவருக்கான பயிற்சிகளை இலங்கை இராணுவம் வழங்குவதைப் போல, டெகத்லன் போட்டியில் தொடர்ந்து சாதிக்கத் தேவையான உதவிகளை வழங்க சமூகமும், நலன்விரும்பிகளும் முன்வரவேண்டும்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<