சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மொயின் அலி

6
Moeen Ali

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.  

2014ஆம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்காக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக மொயின் அலி அறிமுகமானார். இடது கை ஆட்டக்காரரான இவர் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்ச மூலமாக இங்கிலாந்து அணிக்கு முக்கிய பங்காற்றினார். மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சேர்த்து இதுவரை 6678 ஓட்டங்களையும், 366 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் 

இதில் இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 T20i போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும் 67 ஐபிஎல் போட்டிகளிலும், உலக அளவில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட்களிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். 

இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2022ஆம் ஆணடு நடைபெற்ற T20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். 

இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். எனினும், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸின் அழைப்பை ஏற்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடினார். 

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்து அணி தற்போது இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதனையடுத்து அவுஸ்திரேலியா அணியுடன் T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் அந்த அணி விளையாடவுள்ளதுடன், அதற்கான இங்கிலாந்து குழாமும் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது 

எனினும், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனக்கு இடம் கிடைக்கும் என மொயின் அலி எதிர்பார்த்திருந்தார். ஆனால், மொயின் அலி அந்த தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதை அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். 

தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மொயின் அலி, ‘நான் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாட முயற்சி செய்யலாம். ஆனால், அதை நான் செய்ய மாட்டேன் என்பதுதான் நிதர்சனமான உண்மை. நான் ஓய்வு பெற்றாலும், நான் நன்றாக ஆடவில்லை என்பதால் ஓய்வு பெறுவதாக நினைக்கவில்லை. நான் எப்போதும் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால், இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தன்னை தயார் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து நான் இந்த முடிவை எடுக்கிறேன். எனக்கு நானே உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம் இது. இங்கிலாந்து அணி நிர்வாகமும் அதை எனக்கு விளக்கி இருந்தார்கள். எனவே, இதுதான் சரியான நேரம் என நினைத்தேன். அதனால், எனது பங்கை அளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார் 

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமே ஓய்வு பெறுவதாக மொயின் அலி அறிவித்திருக்கும் நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேச லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது. 

இதில் தற்போது நடைபெற்று வருகின்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் நடப்பு சம்பியனான கயானா அமேசன் வொரியர்ஸ் அணிக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மொயின் அலி, முதல் தடவையாக கரீபியன் லீக்கில் விளையாட உள்ளார். மறுபுறத்தில் கடந்த 12 மாதங்களில் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவர் ஐபிஎல்லில் சென்னை சுப்பர் கிங்ஸ், SA20 லீக்கில் ஜோபர்க் சுப்பர் கிங்ஸ் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் கொமிலா விக்டோரியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<