நியுசிலாந்து அணியை விட்டுச் செல்லும் மெக்லெனகன்

1206
Image Courtesy - Getty Image

நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் மெக்லெனகன் நியுசிலாந்து அணியுடனான தனது ஒப்பந்தத்தை ரத்துச் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாடுகளில் இடம்பெறும் T-20 தொடர்களில் பங்குகொள்வதற்காகவே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 31 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான மெக்லெனகன், இதுவரை நியுசிலாந்து அணிக்காக 48 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 82 விக்கெட்டுக்களையும், 28 T-20 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சென் லூசியாஸ் ஸ்டார் அணிக்காக விளையாடிவரும் மெக்லெனகன், மும்பை இந்தியன்ஸ், மிட்ல் செக்ஸ், ஒக்லண்ட் ஏசஸ் மற்றும் லங்கஷயர் ஆகிய கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர். எதிர்வரும் காலங்களில் பிக் பாஷ் தொடரிலும் இணைவதற்காக இவர் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோ ரூட்டின் உலக சாதனை வீண்; இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான….

இது தொடர்பாக மெக்லெனகன் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த சில வாரங்களாக பல புதிய தொடர்களில் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தவண்ணம் உள்ளன. இதன் மூலம் எனது கிரிக்கட் சூழ்நிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டதாகவே உணர்கின்றேன். எனது கோரிக்கையை ஏற்று என்னை நியுசிலாந்து கிரிக்கெட்டில் இருந்து விடுவித்த நியுசிலாந்து கிரிக்கெட் சபைக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நான் நியுசிலாந்து அணியுடன் மிக நெருக்கமாகவே இருந்தேன். எதிர்காலத்தில் மீண்டும் நியுசிலாந்து அணிக்காக விளையாடுவதே எனது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

நியுசிலாந்து அணி வீரர்கள் வெளிநாட்டு T-20 தொடர்களுக்காக விளையாட வேண்டுமாயின் அவர்கள் நியுசிலாந்து கிரிக்கெட் சபையிடமிருந்து அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் அல்லது நியுசிலாந்து கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்ற சட்ட முறைமை உள்ளது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் IPL போட்டிகளுக்காக நியுசிலாந்து அணி வீரர்களுக்கு நியுசிலாந்து கிரிக்கெட் சபை விடுமுறை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.   

மெக்லெனகனின் இந்த விடயம் தொடர்பாக நியுசிலாந்து கிரிக்கெட்டின் பொது முகாமையாளர் பிரையன் ஸ்ட்ரோனச் கருத்துத் தெரிவிக்கையில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் T-20 போட்டிகளில் பிரகாசிக்க அந்தப் போட்டிளில் விசேட திறமையுள்ளவர்கள் பங்கு பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும். அந்த வகையில் மெக்லெனகனின் வேண்டுகோளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்எனத் தெரிவித்தார்.

மெக்லெனகனின் பல்வேறு விதமான வேக மற்றும் மித வேகப் பந்து வீச்சுக்கள் கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிதும் உதவியது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.