அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் உயர் விருதான அல்லன் போர்டர் விருதினை 2024ஆம் ஆண்டுக்காக முன்னணி சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷ் பெற்றிருக்கின்றார்.
ஆப்கானுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் விருது விழாவானது இந்த வாரம் நடைபெற்றிருந்தது. இந்த விருது விழாவில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்காக அசத்திய வீர, வீராங்கனைகளுக்கு அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விருது வழங்கும் விழாவிலேயே மிச்சல் மார்ஷ் அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான அல்லன் போர்டர் விருதினை வென்றிருக்கின்றார். இதேநேரம் மகளிர் வீராங்கனைகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதான பெலின்டா கிளார்க் விருது 2024ஆம் ஆண்டுக்காக ஏஷ்லி கார்டனரிற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மிச்சல் மார்ஷ் கடந்த பருவத்திற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதோடு அதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலும் அவஸ்திரேலிய அணி வெற்றியாளர்களாக மாற முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். இவற்றை கௌரவிக்கும் பொருட்டிலேயே மார்ஷிற்கு இந்த விருதானது வழங்கப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் இந்த பெலின்டா கிளார்க் விருதினை இரண்டாவது முறையாக வென்ற ஏஷ்லி கார்ட்னருக்கு கிடைத்திருந்தது. குறித்த விருது கார்ட்னரிற்கு மகளிர் ஆஷஸ் தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திற்காகவும், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் வெளிப்படுத்திய சிறந்த பந்துவீச்சுக்காகவும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரராகவும் மிச்சல் மார்ஷ் தெரிவு செய்யப்பட்டதோடு, ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் சிறந்த T20I வீரராகவும் சிறந்த டெஸ்ட் வீரராக நதன் லயனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மறுமுனையில் மகளிர் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனைகளுக்குரிய விருதினை சகலதுறைவீராங்கனையான எல்லைஸ் பெர்ரி பெற்றுக் கொண்டார்.
மே.இ.தீவுகளுடன் போராடி தோல்வியடைந்த இலங்கை இளம் அணி
உள்ளூர் கிரிக்கெட்டுக்காக வழங்கப்பட்ட விருதுகளில் ஆடவர் பிக் பேஷ் லீக் தொடரின் சிறந்த வீரராக மேட் சோர்ட் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு, மகளிர் பிக் பேஷ் லீக் தொடரின் சிறந்த வீராங்கனையாக இலங்கை மகளிர் வீராங்கனையான சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<