பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக முன்னாள் வீரரும், அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர, முன்னாள் வீரர்களான இன்சமாம் உல் ஹக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகிய இருவரும் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூவர் அடங்கிய குழுவானது பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டையும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகக் குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேபோல, இந்த தொழில்நுட்பக் குழு கிரிக்கெட் விளையாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரிடம் தெரியப்படுத்தும். மேலும், அந்த முடிவுகளை செயல்படுத்துகின்ற உரிமையும் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டை கட்டமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குதல், திட்டமிடல், விளையாடும் சூழ்நிலைகள், தேசிய தேர்வுக் குழுக்களின் நியமனம், தேசிய அணி பயிற்சியாளர்கள் நியமனம், போட்டி நடுவர்கள், மத்தியஸ்தர்கள் நியமனம், வீரர்களுக்கான ஒப்பந்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்கள் உட்பட, கிரிக்கெட் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் இந்த மூவர் அடங்கிய குழு பரிந்துரைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் ஆடுவது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம்
- ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் தொடர் இலங்கையில்
இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் புதிய தொழில்நுட்ப குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவிக்கையில்,
”பல தசாப்தங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சேவை செய்த மரியாதைக்குரிய நபர்களை உள்ளடக்கிய இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டது எனக்கு ஒரு பெரிய மரியாதை. இது ஒரு சவாலான பணியாகும், ஆனால் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஏனைய இருவரினதும் பரந்த அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டு, அடிமட்டத்தில் இருந்து விளையாட்டின் நிலையை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார்.
இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் புதிய தொழில்நுட்பக் குழு தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் சகா அஷ்ரப் கருத்து தெரிவிக்கையில்,
”பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான இந்த மூவருக்கும் கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது மற்றும் அவர்கள் நவீன கிரிக்கெட்டை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். ஒரு கிரிக்கெட் அணிக்கு மிக முக்கியமான உள்ளூர் கிரிக்கெட் ஆகும். எனவே அதை போட்டித்தன்மையுடன் உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.
மிஸ்பா உல் ஹக், இன்சமாம் உல் ஹக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் திறமையான வீரர்கள், எனவே அவர்களின் உதவியுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் போட்டித் தன்மையை உருவாக்கவும் திறமையான வீரர்களை உருவாக்கவும் முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<