இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிந்துக்கொள்வதற்காக கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை அழைத்து இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இடையில் நேற்றைய தினம் (16) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சகீப் அல் ஹஸனிற்கு சர்வதேசப் போட்டிகளிலும் பந்துவீசுவதற்குத் தடை
இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் விளையாட்டிற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், மைதானங்களின் அபிவிருத்திகள் மற்றும் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதில் கிரிக்கெட்டின் பங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதுமாத்திரமின்றி கிரிக்கட் சபையின் தற்போதைய பொறிமுறை மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதேநேரம், நாட்டின் ஏனைய விளையாட்டுகளை மேம்படுத்துவதில் இலங்கை கிரிக்கெட் சபையின் பங்களிப்பையும், பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் உட்பட பிற விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது விளையாட்டுத்துறையின் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<