இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது எதிர்நோக்கியுள்ள நிர்வாகச் சிக்கல் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையை அறிவுறுத்துவதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் சில காலஅவகாசம் கோருவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக இம்மாதம் 28ஆம் திகதி டுபாய் நோக்கி பயணமாகவுள்ளனர்.
கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நான்கு மாதங்களில் நடத்தப்படும் என அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ஏற்கனவே வாக்களித்தவாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் இலங்கைக்கு ஐ.சி.சியின் உறுப்புரிமையை இழக்க நேரிடும்.
அத்துடன், கடந்த மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற ஐ.சி.சியின் 75ஆவது வருடாந்த கூட்டத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என ஐ.சி.சியின் நிறைவேற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவது சட்டவிரோதமானது என தெரிவித்து நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வழக்கு விசாரணைகளின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த வழக்கு விசாரணைகளின் போது அறிவிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேல, வெத்தமுனி ஆகியோரால் அங்குரார்ப்பணம்
அவ்வாறு, அன்றைய தினம் வழக்கு விசாரணைகள் நிறைவுக்கு வந்தால், விளையாட்டுத்துறை சட்டவிதிமுறைகளுக்கு அமைய எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வேட்பு மனுக்களை கோரி தேர்தலை நடத்த முடியும். எனவே, டிசம்பர் அல்லது 2019 ஜனவரி மாதமளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதை அடிப்படையாகக் கொண்டே விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலை நடாத்த இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதகால அவகாசத்தை ஐ.சி.சியிடம் கோருவதற்காக இம்மாத இறுதியில் டுபாய் செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (10) விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
”இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடாத்துவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகிய பின்னர்தான் அந்த தேர்தலை நாங்கள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதனால், எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. எனவே, இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்காக இம்மாத இறுதியில் ஐ.சி.சியின் அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.
விளையாடாமலே சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதை நிரூபித்து வரும் ஸ்டீவ் ஸ்மித்
முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையிலான குழுவினருக்கும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அவைத் தலைவர் ஷஷாங் மனோகருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த ஜுன் மாதம் 06ஆம் திகதி டுபாயில் உள்ள ஐ.சி.சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை கிரிக்கெட்டை உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்தில் எவ்வாறு அபிவிருத்தி செய்வது மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் நீதிமன்ற தடையுத்தரவினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐ.சி.சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க