இலங்கை வீராங்கனை மில்கா கெஹானி டி சில்வா டோக்கியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதிச்சுற்றில் 45.798 புள்ளிகளை எடுத்து 28ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல்தடவையாக பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் களமிறங்கிய 18 வயதான மில்கா டி சில்வா, உலகின் முன்னணி வீராங்கனைகளுடன் போட்டியிட்டு தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் இலங்கை வீரர்கள் பின்னடைவு
டோக்கியோ ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கலைநய உடற்கலை சாகச தகுதிச்சுற்றில் இலங்கை வீராங்கனை மில்கா கெஹானி களமிறங்கினார்.
நான்கு சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியின் Vault பிரிவில் 13.366 புள்ளிகளை மட்டுமே அவர் பெற்றார். அதேபோல் Uneven bars பிரிவில் 10.866 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், கடைசியாக நடைபெற்ற Balance beam பிரிவில் 11.266 புள்ளிகளையும் Floor பிரிவில் 10.300 புள்ளிகளையும் பெற்றார்.
மொத்தமாக அனைத்து பிரிவுகள் முடிவிலும் 45.798 புள்ளிகளை மில்கா கெஹானி பெற்றார். இதனால் 30 வீராங்கனைகள் பங்குபற்றிய தகுதிச்சுற்றில் மில்கா கெஹானி 28ஆவது இடம்பிடித்து தோல்வி அடைந்தார்.
முதல் 24 வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் மில்கா கெஹானி தகுதிச்சுற்றுடனேயே வெளியேறினார்.
இந்த தகுதிச்சுற்றில் முதல் மூன்று இடங்களையும் ரஷ்யா ஒலிம்பிக் சங்கம் சார்பில் போட்டியிட்ட வீராங்கனைகள் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.
Video – ஜிம்னாஸ்டிக்கில் கலக்கப் போகும் சிங்கப் பெண் Milka De Silva..!| Tokyo Olympics 2020
இதனிடையே, 18 வயதான மில்காவுக்கு இதுதான் முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். தேசிய ஜிம்னாஸ்டிக் சம்பியனான மில்கா, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பயிற்சிகளைப் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மில்காவுடன் போட்டியிட்ட இந்திய வீராங்கனை ப்ரனிதி நாயக் 42.565 புள்ளிகளை எடுத்து 29ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதுஇவ்வாறிருக்க, டோக்கியோ ஒலிம்பிக்கின் மூன்றாவது நாளான நாளைய தினம் இலங்கை சார்பில் ஜூடோ வீரர் சாமர நுவன் தர்மவர்தன, தனது முதலாவது போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்தப் போட்டி நாளை காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேபோல, ஆண்களுக்கான ஒற்றையர் பெட்மிண்டன் முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் நிலூக கருணாரதன நாளை பிற்பகல் 3.50 மணிக்கு போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…