சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் இலங்கை அணியை வழிநடாத்தும் பொறுப்பு மிலிந்த சிறிவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தொடரின், முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி நாளை (மார்ச் 2) தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அசங்க குருசிங்க இலங்கை அணிக்கு முகாமையாளராக நியமனம்
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை அடைந்தமையினால், நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில், இலங்கை A அணிக்காக பல தேசிய அணி வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இத்தொடரின், முதல் மூன்று போட்டிகளுக்குரிய 15 பேர் கொண்ட இலங்கை A அணி வீரர்கள் குழாத்தில், பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாது இருந்த அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா இணைக்கப்பட்டுள்ளதோடு, தேசிய அணியின் சகல துறை ஆட்டக்காரரான திசர பெரேராவிற்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குசல் பெரேரா, சர்வதேச மட்டப் போட்டிகளிலும் சரி, உள்ளூர் போட்டிகளிலும் சரி அண்மைக்காலமாக மோசமான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்தார். எனினும் அவருக்கு இத்தொடர் மூலம் திறமையினை வெளிப்படுத்த மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.
கடந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் பின்னர், இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா, பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் T-20 குழாத்தில் இடத்தினைப் பெற்றுக்கொள்ள இத்தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பு மூலம் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக 185 ஓட்டங்களினை விளாசிய சதீர சமரவிக்ரமவும் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து தமிழ் யூனியன் கழகத்தின் அணித் தலைவர் கித்ருவன் விதானகே குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் பொது இடத்தில் இடம்பெற்ற தகராறிற்கு காரணமாய் இருந்ததால், இடது கை துடுப்பாட்ட வீரரான விதானகேயிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், உள்ளூர் பருவகால போட்டிகளின் காரணமாக அத்தடை பின்னர் எடுக்கப்பட்டிருந்தது.
முதுகில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக, தென்னாபிரிக்க அணியுடனான T-20 தொடரின் நடுப்பகுதியில் நாடு திரும்பி இருந்த தனுஷ்க குணத்திலக்கவின் உடல் நிலை தேறிய காரணத்தினால், அவரும் அணிக்குள் தனக்கென ஓர் இடத்தினைப் பெற்றுள்ளார்.
அத்துடன், சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் சந்துன் வீரக்கொடி மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோரும் 15 பேர் கொண்ட குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் பல மாற்றங்கள்
பங்களாதேஷ் அணியுடான டெஸ்ட் தொடரில், இலங்கை தேசிய அணியில் உள்வாங்கப்பட்டிருக்கும் விக்கும் சன்ஞய மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோரின் பெயரும் இக்குழாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தேசிய அணி வீரர்கள் இந்தக் குழாமிலும் இணைக்கப்பட்டிருப்பினும், தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் இலங்கை அணிக்கான கடமைக்கு அவர்கள் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம்
மிலிந்த சிறிவர்தன (தலைவர்), குசல் ஜனித் பெரேரா, திசார பெரேரா, சந்துன் வீரக்கொடி, தனுஷ்க குணத்திலக்க, சதீர சமரவிக்ரம, செஹான் ஜயசூரிய, கித்ருவன் விதானகே, சரித் அசலன்க,;லஹிரு மதுசன்க, விக்கும் சஞ்சய, அசித்த பெர்னாந்து, அமில அபொன்சோ, ஜெப்ரி வன்டர்சேய், மலிந்த புஷ்பகுமார
ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து லயன்ஸ் குழாம்
கீட்டோன் ஜென்னிங்ஸ் (தலைவர்), டேனியல் பெல்–ட்ரம்மொன்ட், டொம் அஸ்லோப்,;பென் டக்கெட், ஜோ கிளார்க், லியாம் லிவிங்ஸ்டொன், பென் போக்ஸ், சேம் குர்ரன், மார்க் வூட், கிரைக் ஓவர்டொன், டொம் ஹெல்ம், ஜேம்ஸ் புல்லர், ஒல்லி ரெய்னர், ஜோஸ் பொய்ஸ்டேன், டொபி–ரோலன்ட் ஜோன்ஸ்
ஒரு நாள் போட்டித்தொடர் அட்டவணை
- மார்ச் 2 – முதலாவது ஒரு நாள் போட்டி, ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானம்
- மார்ச் 4 – இரண்டாவது ஒரு நாள் போட்டி, ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானம்
- மார்ச் 6 – மூன்றாவது ஒரு நாள் போட்டி, வெலகதெர கிரிக்கெட் மைதானம்
- மார்ச் 9 – நான்காவது ஒரு நாள் போட்டி, R. பிரமேதாச சர்வதேச மைதானம்
- மார்ச் 11 – ஐந்தாவது ஒரு நாள் போட்டி, R. பிரேமதாச சர்வதேச மைதானம்