இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் விளையாடவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக அதிரடி ஆட்டம் காண்பித்தமையினால் தேசிய அணிக்கு மீண்டும் உள்வாங்கப்பட்ட அவர், நேற்று CCC மைதானத்தில் இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தின்போது, தொடை எலும்பு உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.
இதன் காரணமாக 78 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவர், ஓய்வு பெற்று மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை தரப்பு
எனவே, முதல் போட்டிக்காக இன்று மாலை தம்புள்ளை செல்லவுள்ள இலங்கை அணியின் குழாத்துடன் குசல் பெரேரா செல்ல மாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிறிய அளவிலான உபாதைக்கே உள்ளாகியிருக்கின்றமை மருத்துவ அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பில் இருந்து உரிய விதத்தில் சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்று, பங்களாதேஷ் அணியுடன் ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டிக்காக அவர் அணியில் இணைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குசல் ஜனித் பெரேராவின் இடத்தை நிரப்புவதற்காக இடது கை துடுப்பாட்ட வீரர் மிலிந்த சிறிவர்தன அணியில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறிருப்பினும், அண்மைக் காலமாக இடம்பெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான ஆட்டங்களில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த குசல், பல சதங்கள் மற்றும் அரைச் சதங்களை விளாசி, சிறந்த ஓட்டப் பெறுதிகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு