கனிஷ்ட உலக நீர்நிலை டைவிங் சம்பியன்ஷிப்பிற்கு இலங்கையிலிருந்து இருவர்

Junior World Aquatic Junior Diving Championship 2024

49
கனிஷ்ட உலக நீர்நிலை டைவிங் சம்பியன்ஷிப்பிற்கு இலங்கையிலிருந்து இருவர்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நவம்பர் 24ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள கனிஷ்ட உலக நீர்நிலை டைவிங் சம்பியன்ஷிப்பிற்கு (Junior World Aquatic Junior Diving Championship 2024) இலங்கையிலிருந்து தகுதி பெற்றுள்ளனர்.

இதன்படி, கொழும்பு சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த மிகைல் ஜயவீர மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வினுதி கங்காணம்கே ஆகிய இருவரும் இம்முறை கனிஷ்ட உலக நீர்நிலை டைவிங் சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

16 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியிடும் மிகைல் ஜயவீர, கடந்த ஜுன் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய வயதுப் பிரிவு டைவிங் சம்பியன்ஷிப்பில் திறமைகளை வெளிப்படுத்தியதுடன், கனிஷ்ட உலக நீர்நிலை டைவிங் சம்பியன்ஷிப்பிற்கான அடைவு மட்டமான 220.55 புள்ளிகளைக் கடந்து 311 புள்ளிகளை எடுத்து தகுதி பெற்றார்.

அதே வயதுப் பிரிவில் போட்டியிடும் வினுதி கங்காணம்கே, தேசிய வயதுப் பிரிவு டைவிங் சம்பியன்ஷிப்பில் திறமைகளை வெளிப்படுத்தி 220.25 புள்ளிகளைப் பெற்று, அடைவு மட்டமான 180 புள்ளிகளைக் கடந்து கனிஷ்ட உலக நீர்நிலை டைவிங் சம்பியன்ஷிப்பில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.

விசாகா வித்தியாலயத்தின் டைவிங் அணியின் தலைவரான 14 வயதான வினுதி கங்காணம்கே, அண்மையில் நடைபெற்ற 49ஆவது MILO அகில இலங்கை பாடசாலைகள் நீர்நிலை சம்பியன்ஷிப்பில் பிரகாசித்தார். இதில் Platform மற்றும் 2m Springboard ஆகிய நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கங்களையும் 1m Springboard இல் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இதற்கு முன்னதாக, இலங்கை நீர்நிலை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வயதுப் பிரிவு டைவிங் சம்பியன்ஷிப்பில், கங்காணம்கே ஏற்கனவே தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

இதேவேளை, குறித்த 2 வீரர்களின் பயிற்சியாளராக சானக்க விக்கிரமசிங்க செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<