பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாடுடன் பந்துவீச வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற தவறியிருந்ததுடன், ஓட்டங்களையும் மிக இலகுவாக வழங்கியிருந்தனர். இதில், பாபர் அசாம் மற்றும் அபீத் அலி ஆகியோர் சதத்தையும் பெற்றுக்கொண்டிருருந்தனர்.
இவ்வாறான நிலையில், கராச்சியில் நாளை (19) ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை பந்துவீச்சாளர்கள் சற்று கவனத்துடனும், கட்டுப்பாடுடனும் பந்துவீச வேண்டும் என மிக்கி ஆர்தர் அறிவுறுத்தியுள்ளார்.
“பாபர் அசாம் மற்றும் ஆபித் அலி ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நாம் சிறந்த கட்டுப்பாட்டுடன் அவர்களுக்கு பந்துவீச வேண்டும். அதேநேரம், ஓட்ட வேகத்தை இன்னும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
முதல் போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவித்திருந்தனர். ஆடுகளம் இரண்டாவது நாள் ஆடுகளம் போன்று இருந்தது. அதனால், துடுப்பாட்ட வீரர்கள் சாதகத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், பந்துவீச்சாளர்களாக நாம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து, வாய்ப்புகளை பெற முயற்சித்திருக்க வேண்டும்”
அதேநேரம், மிக்கி ஆர்தர் இலங்கை அணியில் உள்ள சிறந்த வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமார என தெரிவித்துள்ளதுடன், குசல் மெண்டிஸ் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதையும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இந்த தொடரில் அவர்களது பிரகாசிப்புகளை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“லஹிரு குமார மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவரால் 150 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீச முடியும். இவ்வாறு பலம் மிக்க பந்துவீச்சாளரான லஹிரு குமார மற்றும் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக பிரகாசிப்பதை எதிர்பார்த்துள்ளேன். திறமை வாய்ந்த வீரரான குசல் மெண்டிஸ் தொடர்ந்து ஓட்டங்களை குவிக்க தொடங்கினால், அவரால் சாதிக்க முடியும் என நம்புகிறேன்.
நான் ஒவ்வொரு வீரர்களும் அவர்களுடைய பங்கினை எவ்வாறு செய்வார்கள் என எதிர்பார்த்துள்ளேன். வீரர்கள் தங்களுடைய பங்கினை சரியாக செய்யும் பட்சத்தில் எம்மால் பலமான அணியொன்றை உருவாக்க முடியும்” என்றார்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (19) கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.