பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக் குழுவில் மிக்கி ஆர்தர்

678

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.

LPL தொடருக்கு நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 வீரர்களின் விபரம்

இலங்கை உட்பட பல முன்னணி கிரிக்கெட் அணிகளை பயிற்றுவித்த அனுபவம் கொண்டிருக்கும் மிக்கி ஆர்தர் தற்போது பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் இயக்குனராக (Team Director) செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் மிக்கி ஆர்தருக்கு அணி இயக்குனர் பொறுப்பிற்கு மேலதிகமாக அணியின் தெரிவுக் குழாத்தில் இணையும் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டிருக்கின்றது.

மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் தெரிவுக் குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் விடயம் அந்த நாட்டின் கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கை மூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தற்போது ஹாரூன் ராஷித் தலைமையில் காணப்படும் பாகிஸ்தான் தெரிவுக் குழாத்தில் மிக்கி ஆர்தருடன், ஹஸ்ஸன் சீமா, அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் பேட்பர்ன் ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புதிய பருவத்திற்குரிய டெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றது.

வனிந்து ஹஸரங்கவிற்கு உபாதை?

எனவே, இலங்கை கிரிக்கெட் அணியின் நிலைமைகளை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆத்தர், குறித்த சுற்றுப் பயணத்தின் போது பாகிஸ்தான் அணிக்கு வீரர்களை தெரிவு செய்ய பக்க பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை பாகிஸ்தான் தேர்வுக் குழாத்தில் இணைந்திருக்கும் மிக்கி ஆர்தர் தனது முதல் பணியாக அடுத்த மாதம் லாஹூரில் நடைபெறவுள்ள பந்துவீச்சு முகாமிற்கு வீரர்களை தெரிவு செய்வதில் கவனம் செலுத்துவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<