உலகக் கிணத்தை உச்சத்தில் முடிக்க பெரேராவுக்கு நெருக்கடி

ICC Men’s T20 World Cup 2021

275
Kusal Perera

T20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை வியாழக்கிழமை (4) தனது கடைசி போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆடவுள்ள நிலையில் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

இலங்கை அணி சுப்பர் 12 சுற்றில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையிலேயே இந்தப் போட்டியில் ஆடவுள்ளது.

இந்தத் தொடர் முழுவதிலும் பெரேரா 7 இன்னிங்ஸ்களில் 94 ஓட்டங்களையே பெற்றுள்ளார். இதன்போது 80 பந்துகளுக்கு முகம்கொடுத்துள்ளார். அவரது ஓட்ட சராசரி 15.66 ஆக இருக்கும் நிலையில் நடப்புச் சம்பியன் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் கடைசி போட்டியில் தனது ஆட்டத் திறனை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

>> ஸ்கொட்லாந்திடம் போராடி வென்ற நியூசிலாந்து அணி

மேற்கிந்திய தீவுகள் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் 2 ஐ தோற்ற நிலையில் அரையிறுதி வாய்ப்புக்காக இந்தப் போட்டியை சாதாரணமாக கருதாது.

‘போட்டிக்கு முகம்கொடுக்க குசல் ஜனித் தன்மை தயார் நிலையில் வைத்துள்ளார். அவர் கடுமையாக உழைத்தபோதும் அது அவருக்கு வெற்றி அளிக்கவில்லை. பெரிதாக ஒன்றும் நிகழவில்லை’ என்று தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிக்கு முன்னர் குறிப்பிட்டார்.

‘ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அவர் எமது சிறந்த வீரர்களில் ஒருவராக தொடர்ந்து இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே இன்னும் போட்டிகள் இருக்கின்றன. என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஆனால், உண்மையில் இதுவரை அவரது ஆடத்திறன் பற்றி நாம் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஆனால் இது போதிய பயிற்சி இல்லாததால் ஏற்பட்டதல்ல. அவர் தனது போட்டிக்காக கடுமையாக உழைக்கிறார்’ என்று ஆத்தர் மேலும் குறிப்பிட்டார்.

பெரும்பாலான அணிகள் பெரேராவுக்கு எதிராக ஆரம்ப ஓவர்களிலேயே சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் உத்தியை கையாண்டன. அவர் பவர்பிளே ஓவர்களில் சுழற்பந்துக்கு ஆடுவதில் தடுமாறுகிறார். அயர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சுழற்பந்துக்கு ஆட முயன்றே ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் மிட்சல் ஸ்டாக் மற்றும் அன்ரிச் நோர்கியாவின் வேகத்தில் சிக்கினார்.

>> ஆறுதல் வெற்றிக்காக மே.தீவுகளுடன் மோதும் இலங்கை!

‘அவர் 20 பந்துகளுக்கு துடுப்பெடுத்தாட வேண்டும். அவரால் 20 பந்துகளுக்கு துடுப்பெடுத்தாட முடியும் என்றால் அவர் சுமார் 20 ஓட்டங்களை பெறுவார் என்பது எமக்குத் தெரியும். எனவே, குறிப்பாக அவர் இன்னும் துடுப்பாட்டத்தில் தனது வழக்கமான திறமையை காட்டவில்லை என்று கூற முடியாது. அவரது துடுப்பில் இருந்து இன்னும் வேகம் பிறக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே நான் 100 வீதம் அவருக்கு ஆதரவு அளிக்கிறேன். அவர் போட்டியை வென்று தரக்கூடியவர் என்பது பற்றி நாம்புவோம். மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் ஒரு புள்ளியில் அந்த செய்தியை எமக்குத் தருவார் என்று நம்புவோம்’ என்று பெரேராவை ஆதரித்து பேசிய ஆத்தர் கூறினார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்காதது மாத்திரமன்றி விக்கெட் காப்பாளராகவும் முக்கிய ஆட்டமிழப்புகளில் தவறிழைத்திருந்தார். அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் டேவிட் வோர்னர் 18 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அவரது பிடியெடுப்பு ஒன்றை தவறவிட்டார். அந்தப் போட்டியில் வோர்னர் 65 ஓட்டங்களை பெற்றார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தீர்க்கமான தருணத்தில் டெம்பா பவுமா 6 ஓட்டங்களுடன் இருந்தபோது அவரது பிடியெடுப்பை பெரேரா தவறவிட்டார். அவர் 46 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

>> LPL தொடரின் வீரர்கள் வரைவுக்கான திகதி அறிவிப்பு!

இந்த இரு பிடியெடுப்புகளும் அந்த போட்டிகளின் முடிவில் மாற்றத்தை செலுத்தியது. இலங்கை அணி வலுவான நிலையில் இருந்தே இந்தப் போட்டிகளில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட பெரேரா இன்னும் 100 வீதம் உடல் தகுதியோடு இல்லை என்பது அவரை விக்கெட்டுக்கு பின்னால் இருந்து பார்க்கும்போது தெரிகிறது.

கடந்த ஓகஸ்டில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான நிலையில் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் கடந்த செப்டெம்பரில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அவரது உடல் தகுதி முழுமையாக இருக்கவில்லை.

31 வயதான பெரேரா ஒரு துடுப்பாட்ட வீரராக போட்டிகளை வென்று தரக்கூடியவராக உள்ளார். ஆனால் அவர் அணியில் இடத்தை உறுதி செய்ய தனது உடல் தகுதி மற்றும் விக்கெட் காப்பில் மேலும் உழைக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் தேர்வாளர்கள் நீண்டகால திட்டமாக வேறு வழியை பார்ப்ப வாய்ப்பு இருக்கிறது. இது அண்மைக் காலத்தில் நிகழும் ஒன்றாக உள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<