IPL ஆட நியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறும் மற்றுமொரு வீரர்

Sri Lanka Tour of New Zealand 2023

744
Sri Lanka Tour of New Zealand 2023

காயம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் வில் ஜாக்ஸுக்குப் பதிலாக நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் மைக்கல் பிரேஸ்வல்லை மாற்று வீரராக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மைக்கல் பிரேஸ்வல் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்குப் பதிலாக ரச்சின் ரவீந்திர நியூசிலாந்து அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஒக்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில். டொம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் சிலர் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக பெயரிடப்படவில்லை.

அந்த வகையில் கேன் வில்லியம்சன் (குஜராத் டைட்டன்ஸ்), டிம் சவுதி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), டேவன் கான்வே, மிட்செல் சாண்ட்னர் (சென்னை சுபர் கிங்ஸ்) ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இவர்கள் 4 பேரும் இலங்கையுடனான 2ஆவது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் ஐபிஎல் அணிகளுடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டிக்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக பின் எலென் (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), லொக்கி பெர்கியுசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மற்றும் கிளென் பிலிப்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஆகியோர் நியூசிலாந்து அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது 8ஆவது வீரராக சகலதுறை வீரர் மைக்கல் பிரேஸ்வல் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆட இந்தியா பயணமாகவுள்ளார்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தின் போது எந்த அணியாலும் வாங்கப்படாத பிரேஸ்வெல் இந்தியாவுடனான தொடருக்கு பின்னர் அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார். இதில் இந்தியாவுடனான 3 T20I மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிரேஸ்வல் இந்திய களங்களை நன்கு புரிந்துக்கொண்டு செயல்பட்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 78 பந்துகளில் சதம் கடந்து 140 ஓட்டங்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பந்துவீச்சிலும் நல்ல நம்பிக்கையை கொடுத்தார்.

32 வயதான மைக்கல் பிரேஸ்வல் இதுவரை 16 சர்வதேச T20I போட்டிகளில் விளையாடி 113 ஓட்டங்களையும், 21 விக்கெட்களையும் எடுத்துள்ளார். எனினும், தற்போது நல்ல போர்மில் இருக்கும் இவரை அடிப்படை தொகையாக ஒரு கோடி ரூபாய்க்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது.

இதேவேளை, மைக்கல் பிரேஸ்வல்லுக்குப் பதிலாக 23 வயது சகலதுறை வீரரான ரச்சின் ரவீந்திரவை நியூசிலாந்து ஒருநாள் குழாத்தில் இணைத்துக் கொள்ள நியூசிலாந்து தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நியூசிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 6 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும், இதுவரை ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<