60 போட்டிகளைக் கொண்ட 9ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 24ஆவது போட்டி நேற்று இரவு மும்பையில் அமைந்துள்ள வங்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்டது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சார்பாக கவ்தம் கம்பீர் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 59 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 20 பந்துகளில் 36 ஓட்டங்களையும், என்டர் ரசல் 16 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் டிம் சவ்தி 2 விக்கட்டுகளைக் கைப்பற்ற மிச்சல் மெக்லனகஹன், ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர்.
பதிலுக்கு 175 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று 12 பந்துகள் மீதமிருக்க இந்த போட்டியில் நயிட் ரைடர்ஸ் அணியை 6 விக்கட்டுகளால் தோல்வி அடையச்செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் தலைவர் ரோஹித் ஷர்மா ஆட்டம் இழக்காமல் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்காலக 68 ஓட்டங்களையும் கிரொன் பொலார்ட் ஆட்டம் இழக்காமல் 17 பந்துகளில் 51 ஓட்டங்களையும், அம்பாதி ரயிடு 20 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்றனர். கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் சுனில் நரேன் 2 விக்கட்டுகளை வீழ்த்த சகீப் அல் ஹசன் மற்றும் உமேஷ் யதவ் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்