வட, மத்திய மற்றும் கரீபியன் கால்பந்து சம்மேளன கிண்ணத்தில் (CONCACAF) பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மெக்சிகோ அணி அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தனது இடத்தை உறுதி செய்து கொண்டது.
2018 பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு இதுவரை தகுதிபெறும் ஐந்தாவது அணி மெக்சிகோவாகும். ஏற்கனவே போட்டியை நடத்தும் ரஷ்யா தகுதிகாண் போட்டி இன்றியே உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை பதிவு செய்ததோடு தென் அமெரிக்க கண்டத்தின் பலம் கொண்ட அணியான பிரேஸில், ஆசிய கண்டத்தில் ஈரான் மற்றும் ஜப்பான் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத்தில் மொத்தம் 32 அணிகள் விளையாடவிருக்கும் நிலையில் மற்றொரு சுற்று தகுதிகாண் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் உலகெங்கும் இடம்பெற்று வருகின்றன.
இதில் CONCACAF பிராந்தியத்தில் உலகக் கிண்ணத்தில் மூன்று இடங்களை பெறுவதற்கு நான்காவது சுற்றில் மொத்தம் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன. இதில் மெக்சிகோ நேரப்படி அந்நாட்டு தலைநகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் மெக்சிகோ அணியுடன் பனாமா அணி பலப்பரீட்சை நடத்தியது.
பிராந்தியத்தில் பலம் கொண்ட அணியான மெக்சிகோவை உறுதியாக எதிர்கொண்ட பனாமா போட்டியின் முதல் பாதியை கோலின்றி முடித்துக் கொண்டது. இதனால் இரண்டாவது பாதியில் பரபரப்பு அதிகரித்தது.
இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவில் ஜுவர்ஜன் டாம்முக்கு பதில் மாற்று வீரராக ஹிர்விங் லொசன்னோ அழைக்கப்பட்டார். மைதானத்திற்கு வந்தது தொடக்கம் விறுவிறுப்பாக ஆடிய லொசன்னோ இரண்டு நிமிடங்கள் மாத்திரமே கழிந்த நிலையில் தலையால் முட்டி கோலொன்றை பெற்றுக்கொடுத்தார்.
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஜப்பான் பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி
ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில்..
இதன்படி போட்டியின் 53ஆவது நிமிடத்தில் கோலொன்றை பெற்ற மெக்சிகோ கடைசி வரை எதிரணிக்கு கோல்கள் எதுவும் விட்டுக் கொடுக்காமல் கிடைத்த கோலை வெற்றி கோலாக மாற்றியது.
இதன்மூலம் 1-0 என்ற கோல் அடிப்படையில் போட்டியில் வெற்றிபெற்ற மெக்சிகோ அணி CONCACAF மண்டல புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளை பெற்று முதலிடத்தை உறுதி செய்து கொண்டது. மெக்சிகோ அணி புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்கு கீழ் பின்தள்ளப்பட வாய்ப்பு இல்லாததால் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை உறுதி செய்து கொண்டது.
பிபா உலகத் தரவரிசையில் தற்போது 14ஆவது இடத்தில் இருக்கும் மெக்சிகோ அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவது இது 16ஆவது தடவையாகும். அந்த அணி 1994 தொடக்கம் தொடர்ச்சியாக அனைத்து உலகக் கிண்ண போட்டிகளிலும் தகுதி பெற்று வருகிறது.
அமெரிக்காவுக்கு நெருக்கடி
இதேவேளை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் அமெரிக்க நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அமெரிக்க அணி தோல்வியை எதிர்கொண்டதால் அந்த அணி அடுத்த உலகக் கிண்ணத்தில் தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. 2014 உலகக் கிண்ணத்தில் காலிறுதிக்கு முன்னேறி கோஸ்டாரிக்கா அணியிடமே அமெரிக்கா 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அமெரிக்காவில் போட்டி நடந்த போதும் அரங்கில் கொஸ்டாரிக்கா ரசிகர்களே நிரம்பி வழிந்தனர். இந்நிலையில் போட்டியின் முதல் பாதியின் 30ஆவது நிமிடத்தில் கோல் போட்ட மார்கோ யுரேனா இரண்டாவது பாதியின் 82ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை போட்டு கொஸ்டாரிக்கா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியுடன் கொஸ்டாரிக்கா CONCACAF மண்டலத்தில் 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதோடு அமெரிக்கா 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா அதே எட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் ஹொன்டுராஸ் அணியுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் தீர்க்கமாக அமையும்.
CONCACAF மண்டலத்தில் நான்காவது இடத்தை பிடிக்கும் அணி ஆசிய மண்டல அணி ஒன்றுடன் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற பலப்பரீட்சை நடத்தும்.
இத்தாலிக்கு ஸ்பெயினிடம் தோல்வி
ஐரோப்பிய கண்ட உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி ஒன்றின் G குழு போட்டியில் இஸ்கோவின் இரட்டை கோலால் ஸ்பெயின் அணி இத்தாலியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது.
ஸ்பெயினின் சன்டியாகோ பர்னாபியு (Santiago Bernabeu, Madrid) அரங்கில் சனிக்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் ரியல் மெட்ரிட் முன்கள வீரர் இஸ்கோ பிரீ கிக் மூலம் முதல் கோலை போட்டதோடு இரண்டாவதாக அதிரடி கோல் ஒன்றையும் பெற்றார்.
பின்னர் செல்சி வீரர் அல்வாரோ மொராடா ஸ்பெயினுக்காக 77ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் போட்டார்.
கடந்த 2006 தொடக்கம் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி ஒன்றில் தோற்றிருக்காத இத்தாலி, ஸ்பெயினிடம் மோசமான கோல் வித்தியாசத்தில் தோற்றும் 3 புள்ளிகள் பின்தங்கி G குழுவில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அந்த அணி பிளே ஓப் (Play Off) போட்டியில் விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் குழு நிலை போட்டிகளில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தை பெறும் அணிகளே 2018 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறும். இதில் சிறந்த புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெறும் எட்டு அணிகள் பிளோ ஓப் போட்டிகளில் விளையாடும்.
ஐரோப்பிய கண்டத்தில் அதிகபட்சமாக மொத்தம் 13 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
G குழுவில் சனிக்கிழமை நடைபெற்ற மற்றைய போட்டியில் லிச்சன்ஸ்டைன் அணியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அல்பேனிய அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அன்றைய தினம் நடந்த மற்றொரு போட்டியில் மசிடோனிய அணி இஸ்ரேலை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது.