இன்னும் ஒரு முறை சண்டை செய்வோம் – மெஸ்ஸி

330

தங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இம்முறை உலகக் கிண்ண கனவை நனவாக்க பாடுபடுவோம் என்று ஆர்ஜன்டீன நட்சத்திரம் மெஸ்ஸி கூறியுள்ளார்.

2022 பிபா கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது. இது அந்த அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆறாவது முறையாகும்.

குரோஷியாவிற்கு எதிராக நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் மெஸ்ஸி மற்றும் அல்வாரெஸின் கோல்களின் உதவியுடன் ஆர்ஜன்டீனா அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

எவ்வாறாயினும், இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப போட்டியில்,  உலக தரவரிசையில் 51ஆவது இடத்தில் இருக்கும் சவுதி அரேபியா அணியிடம் சந்தித்த எதிர்பாராத தோல்வியால், ஆரம்பச் சுற்றைப் பொருட்படுத்தாமல் ஆர்ஜன்டீனா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுவரை கால்பந்து உலகக் கிண்ண வரலாற்றில் 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெய்ன் அணிதான் ஆரம்ப போட்டியில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய நிலையில், தற்போது அந்த வரலாற்றை மாற்றும் வாய்ப்பு ஆர்ஜன்டீனாவுக்கு கிடைத்துள்ளது.

மெஸ்ஸியின் சாகசத்தால் ஆர்ஜன்டீனா இறுதிப் போட்டியில்

இந்த நிலையில், உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக போட்டியின் பிறகு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து மெஸ்ஸி கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘உலகக் கிண்ணத்துக்கு முன் தொடர்ந்து 36 போட்டிகளில் வெற்றியீட்டியிருந்தோம். ஆனால் உலகக் கிண்ண முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் சந்தித்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள கடினமாக இருந்தது.

சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் தோற்போம் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவே இல்லை, இது ஒரு வகையில் எங்கள் அணிக்கு நல்ல சோதனை. ஆனால் நாங்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை காட்டினோம்.

மற்ற எல்லா போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றோம், அந்தப் போட்டிகள் அனைத்தும் இறுதிப் போட்டிகள் போன்றது. ஒன்றில் கூட தோற்றால், நிலைமை மிகவும் சிக்கலானதாகிவிடும். நாங்கள் மிகவும் கடினமான ஒன்றைச் செய்தோம்.  ஆனால் எங்களால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, ஏனென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று எங்களுக்குத் தெரியும். முதல் போட்டியில் தோற்றோம், ஆனால் அது எங்களை பலப்படுத்தியது.

இந்த தருணத்தை அனுபவிப்போம், ஆர்ஜன்டீனாவைப் போலவே இங்கும் எங்கள் ரசிகர்களின் மகிழ்ச்சியைப் பார்ப்பது மிகவும் விலைமதிப்பற்றது. இறுதிப் போட்டியில் எங்களால் சிறந்ததை வழங்குவோம். இதுவரை நாங்கள் சாதித்ததைக் கொண்டாட விரும்புகிறோம்.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதேபோல, குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டி எங்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை” என அவர் கூறினார்.

மேலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டி தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாகவும் அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘எனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கிடைத்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த உலகக் கிண்ணத்துக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. நான் அதற்குத் தயாராக இல்லை என்று நினைக்கிறேன், அதை இப்படி முடிப்பதே சிறந்தது’ என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குரோஷிய போட்டியின் பின்னர் ஆட்ட நாயகன் விருதை வென்ற மெஸ்ஸி, ஜூலியன் அல்வாரெஸை பாராட்டியிருந்தார்.

‘இன்றிரவு (போட்டி நாள்) ஜூலியன் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நிறைய ஓடினார். நிறைய கோல் வாய்ப்புகளை உருவாக்கினார். அவர் எங்களின் மதிப்புமிக்க வீரர். ஆட்டநாயகன் விருதுக்கு அவர் தகுதியானவர்’ என்றார்.

இதற்கிடையில், போட்டி முடிந்ததும், குரோஷியா பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக், இந்த உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸியின் ஆட்டத்தை பாராட்டினார்.

‘அவர் ஆபத்தானவர், அவர் புத்திசாலி. அவர் உலகின் தலைசிறந்த வீரர். அவருடைய நுணுக்கம் மிக உயர்ந்தது, நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மெஸ்ஸி இதுதான்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் உலகக் கிண்ணத்தை லியோனல் மெஸ்ஸி வெல்ல வேண்டும் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏனெனில் 35 வயதாகும் மெஸ்ஸிக்கு இதுதான் கடைசி உலகக் கிண்ணம். இதை அவரே உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மெஸ்ஸி இதுவரை உலகக் கிண்ணத்தை மட்டும் வெல்லவில்லை. இதனால் இந்த உலகக் கிண்ணத்தை ஆர்ஜன்டீனா அணி வென்று அதை மெஸ்ஸி கையில் ஏந்துவதைப் பார்க்க உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மொரோக்கோவின் சவாலை சமாளித்த பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

1978, 1986 உலகக் கிண்ண வெற்றிகளைத் தொடர்ந்து 3ஆவது வெற்றியை ருசிப்பதற்காக இறுதிப் போட்டிக்குள் ஆர்ஜன்டீனா நுழைந்துள்ளது. 36 ஆண்டுகால உலகக் கிண்ண கனவை நனவாக்கும் முயற்சியில் மெஸ்ஸி தீவிரமாக இருக்கிறார்.

அதேபோல, மெஸ்ஸி 2ஆவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். 2014இல் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் சம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் இத்தாலி, பிரேசிலுக்குப் பிறகு தொடர்ச்சியாக 2 தடவைகள் உலகக் கிண்ணத்தை வெல்லும் 3ஆவது அணி என்ற பெருமையை பிரான்ஸ் அணி பெறும். எனவே, பிரான்ஸ், அரஜன்டீனா இரு அணிகளும் சமபலம் படைத்தவையாக இருப்பதால் கால்பந்து ரசிகர்கள் மிகப் பெரிய விருந்திற்காக காத்துள்ளனர்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<