ரியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கரீம் பெனிஸிமாவிற்கு அடுத்ததாக, அர்ஜென்டினா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியும் தான் PSGயை விட்டு விலகும் அதிரடி அறிவிப்பை புதன்கிழமை (07) வெளியிட்டார்.
முன்னதாக கடந்த 6ஆம் திகதி ரியல் மட்ரிட் அணியின் நட்சத்திர முன்கள வீரரான கரீம் பெனிஸிமா, தனது மட்ரிட் அணியுடனான ஒப்பந்தம் நிறைவுற்ற நிலையில் , புதிதாக 3 வருட கால ஒப்பந்த அடிப்படையில் சவூதி அரேபியாவின் அல்-இத்தியாட் கழகத்துடன் இணைந்து கொண்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு லியோனில் இருந்து மட்ரிட் வந்த பெனிஸிமா, ரியல் மட்ரிட் அணிக்காக 648 போட்டிகளில் விளையாடியுள்ளார். 35 வயதான இவர், ஐந்து சம்பியன்ஸ் லீக் மற்றும் நான்கு லா லிகா கிண்ணங்கள் உட்பட மொத்தம் 25 கிண்ணங்களை கடந்த 14 ஆண்டுகளில் மட்ரிட் அணியுடன் வென்றிருக்கிறார். ரியல் மட்ரிட் அணிக்காக 354 கோல்களை அடித்து, அக்கழக வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு (450) அடுத்தபடியாக அதிக கோலடித்த வீரராக பெனிஸிமா திகழ்கிறார்.
ஏற்கனவே ரொனால்டோவும் சவூதி அரேபிய கழகமான அல் நாசர் கழகத்திற்கு விளையாடும் நிலையில், தற்போது பெனிஸிமாவும் அவரோடு அந்த லீக்கில் இணைந்துள்ளார்.
- சமபோஷ 14 வயதின்கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் இம்மாதம் ஆரம்பம்
- பதவி விலகும் இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா
- இலங்கை இல்லாத SAFF சம்பியன்ஷிப்; இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில்
- ஒலிம்பிக், AFC தகுதிகாண் கால்பந்து தொடர் வாய்ப்பை இழக்கும் இலங்கை
இந்த நிலையில் மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திலிருந்து விலகி அமெரிக்க லீக்கில் (MLS) விளையாடும் கழகமான இன்டெர் மியாமி கழகத்தில் இணைந்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் பிரபல கால்பந்து வீரரான டேவிட் பெக்கம் இந்த கழகத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
35 வயதான மெஸ்ஸிக்கு சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்திடம் இருந்து அதிக இலாபம் கொண்ட சலுகை வந்த போதிலும், அவர் இன்டெர் மியாமி கழகத்திற்கு செல்லும் முடிவை எடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மெஸ்ஸி, “எனக்கு ஐரோப்பாவில் இருந்து மற்றைய கழகங்களில் இருந்தும் வாய்ப்புக்கள் வந்தன. எனினும் நான் ஐரோப்பாவில் விளையாடுவதென்றால் பார்சிலோனா அணிக்காக மட்டும் தான் விளையாட இருந்தேன். அதனால் தான் நான் மற்ற வாய்ப்புக்களை விட்டு இந்த அணியை தெரிவு செய்தேன் ” என்றார்.
பார்சிலோனா அணி அவரை வாங்க விருப்பம் தெரிவித்த போதிலும், அவரை வாங்க மற்ற வீரர்களது சம்பளத்தை அவ்வணி குறைக்க வேண்டி நேரிடும். இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் மெஸ்ஸி குறிப்பிட்டார்.
புதிய ஒப்பந்தத்தில் அடிடாஸ் மற்றும் ஆப்பிள் போன்ற பிராண்டுகளின் ஒத்துழைப்பு அடங்கும் என்பது குறிபிடத்தக்கது. மெஸ்ஸி PSG அணிக்காக 75 போட்டிகளில் 32 கோல்களை அடித்துள்ளார். இந்த பருவத்தில் மெஸ்ஸி லீக் 1ஐ 16 கோல்கள் மற்றும் 16 கோலுக்கான பந்து பரிமாற்றங்களுடன் முடித்தார்.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<