மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினத்தில் 4 போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கொமர்ஷல் கிரெடிட், டெக்ஸ்சர்ட் ஜேர்சி, ஜோன் கீல்ஸ், சம்பத் வங்கி அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
இன்று நடைபெற்ற போட்டிகளின் சுருக்கம் மற்றும் முடிவு
டிமோ லங்கா எதிர் கொமர்ஷல் கிரெடிட்
மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் டிமோ லங்கா மற்றும் கொமர்ஷல் கிரெடிட் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி கட்டுநாயக்கவில் அமைந்துள்ள சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொமர்ஷல் கிரெடிட் அணி முதலில் டிமோ லங்கா அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டி நடுவர்கள் : சமிந்த ஹத்துருசிங்ஹ / சுசந்த திசாநாயக்க
கொமர்ஷல் கிரெடிட் அணியின் அழைப்பை ஏற்று முதலில் ஆடிய டிமோ லங்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. டிமோ லங்கா அணியின் சார்பாக துடுப்பாட்டத்தில் நிபுன் கருணாநாயக்க மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடி சதம் அடித்தார். இவர் 101 ஓட்டங்கள் பெற்று ஆட்டம் இழந்தார். இவரைத் தவிர புலின தரங்க 53 ஓட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாக பந்து வீச்சில் சுராஜ் ரந்திவ் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த லஹிரு மதுஷங்க 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 251 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய கொமர்ஷல் கிரெடிட் அணி 48.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று 11 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்டுகளால் டிமோ லங்கா அணியை தோல்வி அடையச் செய்தது. கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அஷான் பிரியன்ஜன் 77 ஓட்டங்களையும், உபுல் தரங்க 56 ஓட்டங்களையும், இமேஷ் உதயங்க 55 ஓட்டங்களையும் பெற்று தமது அணியை வெற்றியின் பக்கம் எடுத்துச் சென்றனர். டிமோ லங்கா அணி சார்பாக பந்து வீச்சில் நிசல தாரக 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
போட்டியின் சுருக்கம்
டிமோ லங்கா – 250/7 (50)
நிபுன் கருணாநாயக்க 101, புலின தரங்க 53, ரமேஷ் மென்டிஸ் 40
சுராஜ் ரந்திவ் 2/39, லஹிரு மதுஷங்க 2/46
கொமர்ஷல் கிரெடிட் – 251 / 5 (48.1)
அஷான் பிரியன்ஜன் 77, உபுல் தரங்க 56, இமேஷ் உதயங்க 55
நிசல தாரக 3/45
முடிவு : கொமர்ஷல் கிரெடிட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி
டெக்ஸ்சர்ட் ஜேர்சி எதிர் மாஸ் எக்டிவ்
மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி மற்றும் மாஸ் எக்டிவ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு பி. சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் எக்டிவ் அணி முதலில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டி நடுவர்கள் : ஹேமந்த பொடெக் / சந்திக அமரசிங்ஹ
இதனை அடுத்து முதலில் ஆடிய டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களைக் குவித்தது. டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டிலான் ஜயலத் அபாரமாக ஆடி ஆட்டம் இழக்காமல் 150 ஓட்டங்களையும், மினோத் பானுக 91 ஓட்டங்களையும் பெற்றனர். மாஸ் எக்டிவ் அணி சார்பாக பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜெஹான் முபாரக் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சரித் ஜயம்பதி 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
பின்பு 330 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மாஸ் எக்டிவ் அணி 25.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் மழை பொழிந்தது. அத்தோடு போதிய வெளிச்சமில்லாத நிலை தொடர்ந்து காணப்பட்டது. இதனால் டக்வத் லுயிஸ் முறையில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி 203 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்து இருந்தது. மாஸ் எக்டிவ் அணி சார்பாக ஜெஹான் முபாரக் மாத்திரம் தனிமரமாக நின்று ஆடி 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி சார்பாக பந்து வீச்சில் சுரங்க லக்மால் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சாலிய சமன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
டெக்ஸ்சர்ட் ஜேர்சி – 329/8 (50)
டிலான் ஜயலத் 150 *, மினோத் பானுக 91,
லசித் எம்புல்தெனிய 3/55, சரித்த ஜயம்பதி 2/61, ஜெஹான் முபாரக் 2/63
மாஸ் எக்டிவ் – 118 / 9 (25.2)
ஜெஹான் முபாரக் 33,
சுரங்க லக்மால் 2/29, சாலிய சமன் 2/25
முடிவு : டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி 203 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுயிஸ் முறையில்)
ஜோன் கீல்ஸ் எதிர் மாஸ் யுனிச்செலா
மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் ஜோன் கீல்ஸ் மற்றும் மாஸ் யுனிச்செலா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மொரட்டுவ டி சொயிஸா கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோன் கீல்ஸ் அணி முதலில் மாஸ் யுனிச்செலா அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டி நடுவர்கள் : ரன்மோர் மார்டினஸ் / சாமர டி சொய்சா
அழைப்பை ஏற்று முதலில் ஆடிய மாஸ் யுனிச்செலா அணியினர் நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது. மாஸ் யுனிச்செலா அணியின் துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா 68 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 61 ஓட்டங்களையும், டி. எம். தில்ஷன் 58 ஓட்டங்களையும், மஹேல உடவத்த 41 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 34 ஓட்டங்களையும் பெற்றனர். ஜோன் கீல்ஸ் அணியின் பந்து வீச்சில் விக்கும் பண்டார 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், இஷான் ஜயரத்ன 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அக்ஷு பெர்னாண்டோ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
பின்னர் 306 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஜோன் கீல்ஸ் அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்று 4 பந்துகள் மீதம் இருக்க 2 விக்கெட்டுகளால் வெற்றியை ருசித்தது. ஜோன் கீல்ஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அக்ஷு பெர்னாண்டோ ஆட்டம் இழக்காமல் 63 ஓட்டங்களையும், ரொசான் சில்வா 52 ஓட்டங்களையும், சதுன் வீரக்கொடி 36 ஓட்டங்களையும், ஷானுக துலாஜ் 38 ஓட்டங்களையும், லஹிரு மிலந்த 24 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 24 ஓட்டங்களையும் பெற்றனர். மாஸ் யுனிச்செலா அணியின் பந்து வீச்சில் டில்ருவான் பெரேரா 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இஷாரா அமரசிங்க 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
மாஸ் யுனிச்செலா – 305/9 (50)
குசல் பெரேரா 68, தனுஷ்க குணதிலக 61, டி. எம் தில்ஷன் 58, மஹேல உடவத்த 41, நிரோஷன் திக்வெல்ல 34
விக்கும் பண்டார 2/70, இஷான் ஜயரத்ன 3/47, அக்ஷு பெர்னாண்டோ 3/32
ஜோன் கீல்ஸ் – 307/8 (49.2)
அக்ஷு பெர்னாண்டோ 63 *, ரொசான் சில்வா 52, சதுன் வீரக்கொடி 36, ஷானுக துலாஜ் 38, லஹிரு மிலந்த 24, திமுத் கருணாரத்ன 24
டில்ருவான் பெரேரா 3/53, இஷாரா அமரசிங்க 3/62
முடிவு – ஜோன் கீல்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி
ஹற்றன் நஷனல் வங்கி எதிர் சம்பத் வங்கி
மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹற்றன் நஷனல் வங்கி அணி முதலில் சம்பத் வங்கி அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டி நடுவர்கள் : சரத் குமார / எரிக் கன்னங்கர
போட்டி ஆரம்பத்தில் 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி முதலில் ஆடிய சம்பத் வங்கி அணி 47 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது. சம்பத் வங்கி சார்பாக துடுப்பாட்டத்தில் ரொமேஷ் புத்திக 93 ஓட்டங்களையும், கௌஷல் சில்வா 91 ஓட்டங்களையும் பெற்றனர். ஹற்றன் நஷனல் வங்கி அணியின் பந்து வீச்சில் புத்தி பெரேரா 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சந்துல வீரரத்ன 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மாதவ வர்ணபுர 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
பின்பு 297 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஹற்றன் நஷனல் வங்கி அணி 21.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்று இருந்த வேளையில் மழை பொழிந்தது. இந்த மழை தொடர்ந்தது. இதனால் டக்வத் லுயிஸ் முறையில் சம்பத் வங்கி அணி 45 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்து இருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி சார்பாக துடுப்பாட்டத்தில் அஷென் பெர்னான்டோ ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் சுருக்கம்
சம்பத் வங்கி – 296/9 (47)
ரொமேஷ் புத்திக 93, கவுஷல் சில்வா 91
புத்தி பெரேரா 3/38, சந்துல வீரரத்ன 2/45, மாதவ வர்ணபுர 2/51
ஹற்றன் நஷனல் – 94/3 (21.5)
அஷென் பெர்னாண்டோ 34 *
முடிவு : சம்பத் வங்கி அணி 45 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுயிஸ் முறையில்)