மெர்க்கன்டைல் கிரிக்கட் தொடரில் நேற்றைய தினத்தில் 2 போட்டிகள் நடைபெற்றன. இதில் டிமோ, கொமர்ஷல் கிரெடிட் ஆகிய அணிகள் வெற்றியை ருசித்தன.
டெக்ஸ்சர்ட் ஜேர்சி எதிர் டிமோ
டெக்ஸ்சர்ட் ஜேர்சி மற்றும் டிமோ அணிகளுக்கு இடையிலான போட்டி FTZ கட்டுநாயக்க மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டிமோ அணி முதலில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டியின் நடுவர்கள் : பிரதீப் உடவத்த / சமிந்த ஹதுருசிங்ஹ
போட்டி மத்தியஸ்தர் : சந்தன மஹேஷ்
இதன்படி டிமோ அணியின் அழைப்பை ஏற்று முதலில் ஆடிய டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி 44.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இலங்கை “ஏ” அணியின் தலைவராக செயற்படும் சரித் அசலன்க நிதானமாக ஆடி 75 ஓட்டங்களையும். ரணேஷ் பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றனர். டிமோ அணியின் பந்து வீச்சில் இஷார பிரஷான் 4 விக்கட்டுகளையும், திக்சில டி சில்வா மற்றும் மதீஷ பெரேரா ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.
பின்னர் 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய டிமோ அணி 32.4 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று 104 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்றது. டிமோ அணியின் துடுப்பாட்டத்தில் ஹஷான் துமிந்து ஆட்டம் இழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்று டிமோ அணியை வெற்றிக்கு அழைத்துச் செனறார். டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி சார்பாக பந்து வீச்சில் சுரங்க லக்மால் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
போட்டியின் சுருக்கம்
டெக்ஸ்சர்ட் ஜேர்சி – 176/10 (44.3) – சரித் அசலன்க 75, ரணேஷ் பெரேரா 42 , இஷார பிரஷான் 37/4, திக்சில டி சில்வா 17/2, மதீஷ பெரேரா 26/2
டிமோ – 177/3 (32.4) – ஹஷான் துமிந்து 87*, நிபுன் கருணாநாயக்க 29, ரமேஷ் மெண்டிஸ் 28*, சுரங்க லக்மால் 26/2
டிமோ அணி 7 விக்கட்டுகளால் வெற்றி
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் உப தலைவர் மற்றும் டிமோ லங்கா அணியின் வீரருமாகிய தினேஷ் சந்திமால் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த போது வேகமாக வந்த பந்து தினேஷ் சந்திமாலின் வலது பெரு விரலை பதம் பார்க்க அவர் உபாதைக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ள நிலையில் அடுத்து வரும் 1 மாத காலத்திற்கு அவருக்கு ஓய்வு அவசியம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இலங்கை – சிம்பாப்வே தொடர் நடைபெறுமா?
மாஸ் எக்டிவ் எதிர் கொமர்ஷல் கிரெடிட்
மெர்க்கன்டைல் கிரிக்கட் தொடரின் டிவிஷன் “ஏ” பிரிவின் 10ஆவது போட்டி நேற்று சரே விலேஜ் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் மாஸ் எக்டிவ் மற்றும் கொமர்ஷல் கிரெடிட் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொமர்ஷல் கிரெடிட் அணி முதலில் மாஸ் எக்டிவ் அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டியின் நடுவர்கள் : ரவீந்திர விமலசிறி / சாமர டி சொய்சா
போட்டி மத்தியஸ்தர் : பேமலால் பெர்னாண்டோ
இதன்படி முதலில் ஆடிய மாஸ் எக்டிவ் அணி லஹிரு மதுசங்க மற்றும் லஹிரு கமகே ஆகியோரின் பந்து வீச்சு வலையில் சிக்கி 20.5 ஓவர்களில் 97 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. மாஸ் எக்டிவ் அணியின் துடுப்பாட்டத்தில் எண்டி சொலமன் தனிமரமாக போராடி 24 ஓட்டங்களைப் பெற மற்ற யாரும் அவருக்கு சார்பாக நின்று ஓட்டங்களைப் பெற ஒத்துழைப்பு வழங்கவில்லை. கொமர்ஷல் கிரெடிட் அணியின் பந்து வீச்சில் லஹிரு மதுசங்க 5 விக்கட்டுகளையும் மற்றும் லஹிரு கமகே 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 98 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய கொமர்ஷல் கிரெடிட் அணி 19.1 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்று 185 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கட்டுகளால் வெற்றியைப் பதிவு செய்தது. கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாக டில்ஹான் குரே 36 ஓட்டங்களையும், அஷான் பிரியன்ஜன் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் சுருக்கம்
மாஸ் எக்டிவ் 97/10 (20.5) – எண்டி சொலமன் 24, லஹிரு மதுசங்க 31/5, லஹிரு கமகே 31/4
கொமர்ஷல் கிரெடிட் 98/2 (19.1) – டில்ஹான் குரே 36, அஷான் பிரியன்ஜன் 36*
கொமர்ஷல் கிரெடிட் அணி 8 விக்கட்டுகளால் வெற்றி
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்