தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றுவதற்கு முக்கிய புள்ளிகளாக திகழ்ந்த வீரர்கள் புதிய டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் அசுர முன்னேற்றம் கண்டுள்ள அதேவேளை, தென்னாபிரிக்க வீரர்களுக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆயிரம் ஓட்டங்களை தாண்டுவதை இலக்காக வைத்துள்ள குசல் மெண்டிஸ்
கடந்த ஆண்டு இந்திய நட்சத்திர துடுப்பாட்ட….
நேற்றைய தினம் (23) நிறைவுக்கு வந்திருந்த இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பின்னரான டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசை சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்பு செய்து வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது. இவ்வேளையில், இலங்கை அணியின் தொடர் வெற்றிக்காக வித்திட்டவர்கள் புதிய டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் அசுர முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இறுதி டெஸ்ட் போட்டியின் போது ஓஷத பெர்ணான்டோவுடன் இணைந்து இலங்கை அணியின் வெற்றிக்கு இணைப்பாட்டத்தின் பங்காளியாக திகழ்ந்த குசல் மெண்டிஸ் தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் புகுந்துள்ளார். 657 புள்ளிகளுடன் தற்போது 18ஆவது இடத்தை அவர் அடைந்துள்ளார்.
மேலும், இணைப்பாட்டத்தின் பங்காளியாக திகழ்ந்த குறித்த தொடரிலேயே டெஸ்ட் அறிமுகம் பெற்ற ஓஷத பெர்ணான்டோ 35 இடங்கள் முன்னேறி 65ஆவது இடத்தை அடைந்துள்ளார். இவர் முதல் முறையாக 455 புள்ளிகளை பெற்று வாழ்நாள் அதிகூடிய டெஸ்ட் புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து ஹஷிம் அம்லா நீக்கம்
இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள 5…
குறித்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக திகழ்ந்த நிரோஷன் டிக்வெல்ல 8 இடங்கள் முன்னேறி தற்போது 564 புள்ளிகளுடன் 37ஆவது இடத்தை அடைந்துள்ளார். மேலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னே 3 நிலைகள் முன்னேறி 342 புள்ளிகளுடன் 98ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியின்போது மொத்தமாக 204 ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருது வென்ற குசல் பெரேரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்காததன் காரணமாக ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 41ஆவது இடத்தை அடைந்துள்ளார். மேலும், குறித்த தொடர் மூலம் குசல் பெரேரா டெஸ்ட் கிரிக்கெட் வாழ்நாளில் அதி உச்ச புள்ளிகளாக 559 புள்ளிகளை பெற்றுள்ளார்.
தென்னாபிரிக்க அணி சார்பாக துடுப்பாட்டத்தில் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி குக் தொடரில் மொத்தமாக 222 ஓட்டங்களை பெற்றிருந்தாலும் அவருக்கு புதிய தரவரிசையில் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. ஏனைய வீரர்கள் பெரிதாக துடுப்பாட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தாததன் காரணமாக தரவரிசையில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை (முதல் 5 இடங்கள்)
- விராத் கோஹ்லி (இந்தியா) – 922 புள்ளிகள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 897 புள்ளிகள்
- சடீஸ்வர் புஜாரா (இந்தியா) – 881 புள்ளிகள்
- ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) – 857 புள்ளிகள்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) – 763 புள்ளிகள
- ஹென்றி நிக்கலஸ் (நியூசிலாந்து) – 763 புள்ளிகள்
பந்துவீச்சில் தொடரில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த விஷ்வ பெர்ணான்டோ 6 இடங்கள் முன்னேறி 385 புள்ளிகளுடன் பாக். வீரர் ரஹத் அலியுடன் சேர்ந்து 43ஆவது இடத்தில் உள்ளார். மேலும் இவர் பெற்றுக்கொண்ட புள்ளிகளானது அவரது வாழ்நாளில் பெறப்பட்ட அதிஉச்ச டெஸ்ட் புள்ளிகளாகும்.
தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித 8 இடங்கள் முன்னேறி 326 புள்ளிகளுடன் 51ஆவது இடத்தை அடைந்துள்ளார். சுரங்க லக்மால் 3 இடங்கள் முன்னேறி 573 புள்ளிகளுடன் இந்திய வீரர் உமேஸ் யாதவுடன் சேர்ந்து 30ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.
இறுதி டெஸ்ட் போட்டியின்போது தென்னாபிரிக்க அணி வீரர்களின் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்த இலங்கை அணியின் பகுதிநேர பந்துவீச்சாளரான தனன்ஜய டி சில்வா டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 19 இடங்கள் முன்னேறி 170 புள்ளிகளுடன் 77ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை நுணுக்கமான வேகப்பந்துவீச்சால் மிரட்டி தொடரில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய டுவன்னி ஒலிவியர் 10 டெஸ்ட் போட்டிகளுக்குள் மேலும் 3 இடங்கள் முன்னேறி 692 புள்ளிகளுடன் 19ஆவது இடத்தை அடைந்துள்ளார். இது அவரது வாழ்நாளில் பெறப்பட்ட அதிஉச்ச டெஸ்ட் புள்ளிகளாகவும் அமைந்திருக்கின்றது. தென்னாபிரிக்க அணி சார்பாக ஏனைய பந்துவீச்சாளர்கள் பிரகாசிக்காததன் காரணமாக அவர்களுக்கு தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
புதிய டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் வீரர்களின் தரவரிசை (முதல் 5 இடங்கள்)
- பெட் கம்மிண்ஸ் (அவுஸ்திரேலியா) – 878 புள்ளிகள்
- ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து) – 862 புள்ளிகள்
- ககிஸோ ரபாடா (தென்னாபரிக்கா) – 851 புள்ளிகள்
- வேர்னன் பிலாண்டர் (தென்னாபிரிக்கா) – 813 புள்ளிகள்
- ரவீந்திர ஜடேஜா (இந்தியா) – 794 புள்ளிகள்