சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரராக வளர்ந்து வரும் கமிந்து மெண்டிஸை தெரிவு செய்துள்ளது.
>> ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹஸரங்க
கமிந்து மெண்டிஸ், அயர்லாந்தின் மார்க் அடையர் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்ரி ஆகியோர் ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வீரர்கள் பரிந்துரையில் இருந்து கமிந்து மெண்டிஸ் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக வாக்குகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
சில்லேட் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷிற்கு எதிராக இலங்கை வெற்றி பெற முக்கிய காரணமாக கமிந்து மெண்டிஸ் அமைந்திருந்தார். அவர் குறித்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியதோடு அதன் மூலம் சில சாதனைகளையும் நிலை நாட்டினார். மெண்டிஸ் குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தியிருந்த ஆட்டமே அவர் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவாக முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.
இதேவேளை பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற T20I தொடரிலும் கமிந்து மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தான் ICC இன் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவாகிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் கமிந்து மெண்டிஸ் அதற்காக மிகவும் சந்தோசமடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இங்கிலாந்தின் 25 வயது நிரம்பிய மய்யா போச்சியர் தெரிவாகியிருக்கின்றார்.
மய்யா போச்சியர் இங்கிலாந்து அணி தமது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட T20I தொடரினை இங்கிலாந்து 4-1 எனக் கைப்பற்ற முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். மய்யா போச்சியர் குறிப்பிட்ட T20I தொடரில் 55.75 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு 223 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<