இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களைக் களைக்க வைத்துவிட்டு, அதன் பின்னர் ஓட்டங்களைக் குவிக்க எதிர்பார்ப்பதாக, இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான இந்த டெஸ்ட் தொடரில், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்துள்ளதோடு, இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள், அவ்வளவு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருக்கவில்லை. இலங்கைக்காக ஓரளவு சிறப்பாகத், தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெற்றவராக குசால் மென்டிஸ் காணப்படுகிறார். 4 இனிங்ஸ்களில் அவர் 114 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்களை அதிக ஓவர்கள் பந்துவீச வைப்பதே முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளோம். ஒரு நாளில் நான்காவது அல்லது ஐந்தாவது முறையாக ஒருவர் பந்துவீச வரும்போது, ஓட்டங்களை விட்டுக்கொடுப்பார் என்பது இயற்கையானது. நீண்டநேரம் நாங்கள் துடுப்பெடுத்தாடினால் எங்களுடைய இலக்குகளை இலகுவாக அடையலாம்” எனத் தெரிவித்தார்.
அடுத்த டெஸ்ட் போட்டி, 9ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், அப்போட்டிக்காகச் சிறப்பாகப் பயிற்சியெடுத்துள்ளதாக குசல் மென்டிஸ் தெரிவித்தார். “லோர்ட்ஸ் போட்டிக்குச் செல்வதற்கு முன்பாக, ஐந்து நாட்களுக்குச் சிறப்பான பயிற்சியை எடுத்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்