உலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணிக்கு மறக்க முடியாத இணைப்பாட்டங்கள்

608
espncricinfo

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களை பொறுத்தவரையில் இலங்கை அணி, இனிய நினைவுகள் பலவற்றை கொண்டிருக்கின்றது.

அப்படியான இனிய நினைவுகளுக்கு காரணமான இலங்கை அணியின் உலகக் கிண்ண இணைப்பாட்டங்கள் சிலவற்றை கடந்த காலத்தில் இருந்து மீட்டுவோம்.

வேகப் பந்துவீச்சில் மிரட்டி சாதித்துக் காட்டிய சமிந்த வாஸ்

சுனில் வெத்திமுனி – றோய் டயஸ் – 1979

இங்கிலாந்தில் நடைபெற்ற 1979 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் இலங்கை அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. ஏனெனில், இந்த உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி விளையாடிய போட்டி ஒன்று அதற்கு முக்கிய காரணமாகும்.

குறித்த போட்டி, 1979 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலை மோதல்களில் ஒன்றாக அமைந்தது. மென்செஸ்டர் நகரில் ஆரம்பமான போட்டியில் இலங்கை அணியும் இந்திய அணியும் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பம் அமையவில்லை. இலங்கையின் முதல் விக்கெட்டாக அணித் தலைவர் பந்துல குணவர்தன வெளியேற, இச்சந்தர்ப்பத்தில் உருவாகிய தடுமாற்றத்தினை சமாளிக்க நல்ல இணைப்பாட்டம் ஒன்று தேவையாக இருந்தது.

இந்நிலையில் களத்தில் இருந்த சுனில் வெத்திமுனி மற்றும் புதிய துடுப்பாட்ட வீரர் றோய் டயஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் ஓட்டங்களை நிதானமாக அதிகரித்தனர்.   

தொடர்ந்து இரு வீரர்களும் சிவப்பு பந்து பயன்படுத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இரு வீரர்களினதும் இணைப்பாட்டம் காரணமாக இலங்கை அணி தமது  துடுப்பாட்ட இன்னிங்ஸில் 238 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. இந்த இணைப்பாட்டத்திற்கு காரணமான வீரர்களில் ஒருவரான சுனில் வெத்திமுனி 67 ஓட்டங்களை எடுத்ததோடு, றோய் டயஸ் 50 ஓட்டங்களை பெற்றிருந்தார். இப்போட்டியிலேயே றோய் டயஸ் சர்வதேச போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்தினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 239 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது.

இந்திய அணியின் தோல்வியின் மூலம் இலங்கை அணி, சர்வதேச போட்டிகளில் தாம் பெற்றுக் கொண்ட முதல் வெற்றியினை பதிவு செய்து கொண்டது.

இலங்கை அணி, இவ்வாறு சர்வதேச போட்டிகளில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்ய சுனில் வெத்திமுனி மற்றும் றோய் டயஸ் ஜோடியின் இணைப்பாட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

அரவிந்த டி சில்வா – அர்ஜூன ரணதுங்க – 1996

இலங்கை அணி, தமது கன்னி உலகக் கிண்ண கோப்பையை 1996 ஆம் ஆண்டு வென்றது. இலங்கை அணிக்கு இந்த வெற்றி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினை வீழ்த்தியதன் மூலமே கிடைத்தது.

பாகிஸ்தானின் லாஹூர் நகரில் 1996 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஆரம்பமாகிய பின்னர், முதலில் துடுப்பாடிய  அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களுக்கு 242 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

உலகக் கிண்ண வரலாற்றை பேசும் ஹெட்ரிக்-விக்கெட்டுகள்!

இந்த வெற்றி இலக்கினை அடைந்தால் இலங்கை தமது கன்னி உலகக் கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நிலையில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் ரொமேஷ் கலுவிதாரன ஆகியோர் தத்தமது விக்கெட்டுக்களை பத்திற்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணிக்கு மோசமான ஆரம்பம் ஒன்றே கிடைத்தது.  

பின்னர் களம் வந்த அசங்க குருசிங்க அரைச்சதம் (65) ஒன்றுடன் நம்பிக்கை தந்த போதிலும் அவரின் விக்கெட்டினால் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர் கொண்டது.

இவ்வாறானதொரு நிலையில் நான்காம் விக்கெட்டுக்காக அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை அணித் தலைவர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஜோடி சேர்ந்து உலகக் கிண்ண கனவுகளோடு தமது இணைப்பாட்டத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணி கிளேன் மெக்ராத், ஷேன் வோன் போன்ற அதிசிறந்த பந்துவீச்சாளர்களை தன்னகத்தே கொண்டிருந்த போதிலும் அரவிந்த டி சில்வா மற்றும் அர்ஜூன ரணதுங்க ஜோடியின் இணைப்பாட்டத்தை தகர்க்க முடியாமல் போனது.

இறுதியில் இரு வீரர்களும் நான்காம் விக்கெட்டுக்காக 97 ஓட்டங்களை பகிர போட்டியின் வெற்றி இலக்கினை (242) மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காமல் இலங்கை அணி அடைந்ததோடு, உலகக் கிண்ணத்தையும் முதல் தடவையாக வென்றது.

இந்த உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முன்னர் இலங்கை அணி ஐந்து உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடிய போதிலும் அவற்றில் நான்கு வெற்றிகளை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சொந்த நாடு ஒன்றில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரை வென்ற முதல் அணியாகவும் இலங்கை அணி மாறியது.

இலங்கை அணியின் தற்சிறப்பான இந்த உலகக் கிண்ண வெற்றிக்கு நல்ல இணைப்பாட்டம் ஒன்றுடன் இறுதிப் போட்டியில் உதவிய அரவிந்த டி சில்வா சதம் கடந்து 127 ஓட்டங்களை பெற்றதுடன், உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் சதம் பெற்ற மூன்றாவது வீரராகவும் மாறினார். இதேநேரம், அணித் தலைவர் அர்ஜூன ரணதுங்க அதிரடியினை வெளிப்படுத்தி 37 பந்துகளில் 47 ஓட்டங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

சனத் ஜயசூரிய – ஹஷான் திலகரட்ன – 2003

இலங்கை அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட உலகக் கிண்ணத் தொடர்களில் ஒன்றாகவே தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2003 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடர் அமைகின்றது.

வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

இந்த உலகக் கிண்ணத் தொடரில் குழு B இல் இடம்பெற்ற இலங்கை அணி, தமது முதல் போட்டியில் திறமைமிக்க நியூசிலாந்து அணியினை எதிர்கொண்டிருந்தது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக ஜொலிப்பதற்கான உத்வேகம் இலங்கை அணிக்கு தேவையாக இருந்தது. அதனால், நியூசிலாந்து அணியுடனான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இலங்கை அணி களமிறங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் ஸ்டீபன் பிளமிங், இலங்கை வீரர்களை முதலில் துடுப்பாட பணித்தார். இதற்கு அமைவாக இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரியவும், மாவன் அட்டபத்துவும் களம் வந்தனர். எனினும், போட்டி ஆரம்பித்து சொற்ப நேரத்திலேயே மாவன் அட்டபத்து தனது விக்கெட்டினை ஷேன் போன்டின் வேகத்திற்கு இரையாக்கியிருந்தார்.

அட்டபத்துவின் விக்கெட் இலங்கை அணிக்கு சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் களத்தில் நின்ற அணித் தலைவர் சனத் ஜயசூரிய, புதிய வீரராக வந்த ஹஷான் திலகரட்ன உடன் சேர்ந்து அணியினை கட்டியெழுப்பினார்.

இரண்டு வீரர்களினதும் சாமர்த்திய ஆட்டம் காரணமாக இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 170 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. மேலும், இந்த இணைப்பாட்டம் 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக மாறியதோடு, குறித்த உலகக் கிண்ணத் தொடர் நிறைவடையும் போது அதில் பதிவு செய்யப்பட்ட நான்காவது அதிகூடிய இணைப்பாட்டமாகவும் ஆகியது.

இந்த இணைப்பாட்டத்திற்கு உதவி செய்த சனத் ஜயசூரிய, 2003 ஆம் ஆண்டில் தான் பதிவு செய்த நான்காவது ஒரு நாள் சதத்துடன் 120 ஓட்டங்களை பெற, ஹஷான் திலகரட்ன ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு வீரர்களினதும் இணைப்பாட்ட உதவியோடு இலங்கை அணி குறித்த போட்டியில் 7 விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பின்னர் வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி, 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியினை தழுவியது.

நியூசிலாந்து அணியின் தோல்வியினால் இலங்கை அணி, 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்து குறித்த தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கும் தெரிவாகி சிறந்த பதிவினை வெளிக்காட்டியிருந்தது.

திலகரட்ன டில்ஷான் – உபுல் தரங்க –  2011

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர், இலங்கை அணிக்கு பல விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கிண்ணத் தொடராக அமைந்திருந்தது.

2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்ட இலங்கை அணி, கண்டியில் நடைபெற்ற குழுநிலை போட்டி ஒன்றில் ஜிம்பாப்வே அணியினை எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் எல்டன் சிக்கும்பரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார்.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக உபுல் தரங்க மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் களம் வந்திருந்தனர். அத்தோடு மிகவும் பொறுப்பான முறையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினர்.

ஜிம்பாப்வே எவ்வளவு முயன்றும் இலங்கை அணியின் முதல் விக்கெட்டினை கைப்பற்ற முடியாத நிலையில், டில்ஷான் – தரங்க ஜோடி இலங்கையின் முதல் விக்கெட்டுக்காக 282 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.

முதல் விக்கெட்டுக்கான இந்த இணைப்பாட்டம், உலகக் கிண்ண தொடர்களில் முதல் விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் என்ற உலக சாதனையாகவும் மாறியது.

இதேநேரம் இந்த இணைப்பாட்டத்தின் பங்காளர்களான உபுல் தரங்க மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் சதங்களை பதிவு செய்து கொண்டனர். அதில் திலகரட்ன டில்ஷான் 144 ஓட்டங்களையும், உபுல் தரங்க 133 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு இலங்கை அணி குறித்த போட்டியில் 6 விக்கெட்டுக்களை இழந்து 327 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் இலங்கை அணியின் வெற்றி இலக்கான 328 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி, 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியடைந்தது.

ஜிம்பாப்வே அணியின் தோல்வியோடு இலங்கை உலக சாதனை ஒன்றை பதிவு செய்து வெற்றி பெற்றதோடு, அந்த சாதனைக்கு உபுல் தரங்க மற்றும் திலகரட்ன டில்ஷான் ஜோடி தமது இணைப்பாட்டம் மூலம் அதிரடியான பங்களிப்பினையும் வழங்கியது.

இந்த உலகக் கிண்ண இணைப்பாட்டங்களில் நீங்கள் விரும்பும் இணைப்பாட்டம் எது என்பதை கீழே பதிவிடுங்கள்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க