முரளி மற்றும் சங்காவிடம் மன்னிப்புக் கோரினார் மெக்கலம்

1976
McCullum apologises to Kumar Sangakkara for a controversial run out of Muttiah Muralitharan

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், முத்தையா முரளிதரனைச் சர்ச்சைக்குரிய விதத்தில் ரண் அவுட் செய்தமைக்காக, அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குமார் சங்கக்காரவிடமும் ரண் அவுட் முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட முரளிதரனிடமும் மன்னிப்புக் கோருவதாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியிருந்தார்.

கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற இப்போட்டியில் 52 ஓட்டங்களால் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, மீண்டும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது. ஆனால், தனித்து நின்று போராடிய குமார் சங்கக்கார, 99 ஓட்டங்களுடன், ஷேன் பொன்ட்டின் பந்துவீச்சை எதிர்கொண்டார். பந்தை பைன் லெக் திசைக்குத் திருப்பிய சங்கக்கார, தனது சதத்தைப் பெற்றார்.

இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அளவிற்கு பயிற்சி ஆட்டம் போதுமற்றது : கருணாரத்ன

விக்கெட் காப்பாளரை அல்லது பந்துவீச்சாளரை நோக்கிப் பந்து சென்று, பந்து உயிர்ப்பில் இல்லாத நிலை உருவாக முன்னரே, சதம் பெற்ற சங்கக்காரவைப் பாராட்டுவதற்காக, எதிர்முனையை நோக்கி, முரளி சென்றார். இந்த வாய்பைப் பயன்படுத்தி, கிறிஸ் மார்ட்டின் எறிந்த பந்தைப் பெற்ற விக்கெட் காப்பாளராக அப்போது இருந்த பிரென்டன் மக்கலம், முரளியை ஆட்டமிழப்புச் செய்தார்.

இதன்மூலம், இலங்கையின் இனிங்ஸ் முடிவுக்கு வந்திருந்தது. 119 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பாடியிருந்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகளால் வென்றிருந்தது. ஆனால், முரளியின் ஆட்டமிழப்பு, சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, விளையாட்டின் உணர்வுகளை அது மீறுகிறதா என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன.

எனினும் அப்போதைய தலைவர் ஸ்டீபன் பிளமிங், அந்த ஆட்டமிழப்புத் தொடர்பில் வருத்தங்கள் இல்லையெனவும், தவறொன்றை முரளி செய்ததாகவும், அதற்கான விலையை அவர் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய பிரென்டன் மக்கலம், ஆச்சரியமற்ற விதமாக, அந்தச் சம்பவம், சர்ச்சையையும் பிழையான உணர்வுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இலங்கை வீரர்கள், அதிர்ச்சியடைந்திருந்தனர். அவர்களுடைய அணித்தலைவரான மஹேல ஜெயவர்தன அப்போது, ‘விதிகளின்படி அது ரண் அவுட், பந்து உயிர்ப்புடனேயே இருந்தது. ஆனால், விளையாட்டின் உணர்வுகள் பற்றிக் கலந்துரையாடும் காலத்தில் இருக்கிறோம். இது மீண்டும் நடைபெறாது என நம்புகிறோம். நாம் கிரிக்கெட் விளையாடும் முறை இதுவன்றுஎன்று தெரிவித்திருந்தார்.

நேரத்தை என்னால் பின்னால் கொண்டு செல்ல முடியுமெனில், நான் அதைச் செய்வேன். விதிகளின் கீழ் நாங்கள் செயற்பட்டோம், உணர்வுகளின் கீழல்ல. மிக முக்கியமான வித்தியாசமொன்றுள்ளது, அதை நான் பல ஆண்டுகள் பின்னரே உணர்ந்தேன். அந்த விடயத்தை, இந்த மாலையில் நான் கவனஞ்செலுத்த விரும்புகிறேன்என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ‘முரளியை ரண் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து ஏறத்தாழ 10 ஆண்டுகளின் பின்னர், விடயங்களை நான் வித்தியாசமாகப் பார்க்கிறேன். அத்தோடு, நான் வித்தியாசமான மனிதன் என நான் நம்புகிறேன். குமார் சங்கக்கார இங்குள்ளார். சங்கா, உங்களை நான் மிகப்பெரியளவில் வியக்கிறேன். உங்களை நண்பரென நினைக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அன்றைய தினத்தில் எனது நடவடிக்கைகளுக்காக, உங்களிடமும் முரளியிடமும் மன்னிப்புக் கோருகிறேன்என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் –  விஸ்டன் இலங்கை

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்