வர்த்தக நிறுவனங்களின் பிரீமியர் லீக்கில் சதீர, திரிமான்ன அபார சதம்

367
MCA PREMIER LEAGUE

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகள் இன்று (16) நடைபெற்றன. இதில் எல்.பி. பினான்ஸ் அணிக்காக சதீர சமரவிக்ரம தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சதம் விளாசியதோடு, தேசிய அணி வீரர் லஹிரு திரிமான்னவும் ஹேலீஸ் அணிக்காக சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

இமாலய ஓட்டங்களுடன் ஆரம்பமான வர்த்தக நிறுவனங்களின் பிரீமியர் லீக்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள்…

எல்.பி. பினான்ஸ் எதிர் கான்ரிச் பினான்ஸ்

சதீர சமரவிக்ர அடுத்தடுத்து இரண்டாவது சதத்தை பெற கான்ரிச் பினான்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் எல்.பி. பினான்ஸ் அணி 189 ஓட்டங்களால் இலகு வெற்றியை பெற்றது.

மொரட்டுவை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட எல்.பி. பினான்ஸ் அணிக்கு விக்கெட் காப்பாளரும் வலதுகை துடுப்பாட்ட வீரருமான சமரவிக்ரம அதிரடி காட்டினார். அவர் 118 ஓட்டங்களை பெற்றதோடு சரித் அசலங்க 83 ஓட்டங்களை குவித்தார்.

இதன் மூலம் எல்.பி. பினான்ஸ் அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 342 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கான்ரிச் பினான்ஸ் நின்று பிடித்து துடுப்பெடுத்தாட தவறியது. இதனால் அந்த அணி 38.4 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ரஜீவ வீரசிங்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

சதீர சமரவிக்ரம கடந்த சனிக்கிழமை (15) நடந்த சம்பத் வங்கிக்கு எதிரான போட்டியில் 121 ஓட்டங்களை பெற்று எல்.பி. பினான்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

எல்.பி. பினான்ஸ் – 342/9 (50) – சதீர சமரவிக்ரம 118, சரித் அசலங்க 83, உதித் மதுஷங்க 3/61, முதுமுதலிகே புஷ்பகுமார 2/53, ரொஷான் லக்சிறி 2/60,

கான்ரிச் பினான்ஸ் – 153 (38.4) – அலங்கார அசலங்க 45, கவிந்து குலசேகர 45, சஹன் விஜேரத்ன 32, ரஜீவ வீரசிங்க 5/37, இசுரு உதான 3/27,

முடிவு – எல்.பி. பினான்ஸ் 189 ஓட்டங்களால் வெற்றி


ஹேலீஸ் எதிர் டீஜே லங்கா

தேசிய அணியில் இடம்பிடிக்க தொடர்ந்து போராடிவரும் லஹிரு திரிமான்ன பெற்ற அபார சதத்தின் மூலம் டீஜே லங்கா அணிக்கு எதிராக 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹேலீஸ் அணி இலகு வெற்றி பெற்றது.

மக்கொன, சர்ரே அரங்கில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் தொட்டு சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹேலீஸ் அணிக்கு திரிமான்ன கடைசி வரை களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 109 ஓட்டங்களை பெற்றார். அண்டி சொலமன் (69) மற்றும் ரொன் சந்திரகுப்தா (65) அரைச்சதம் பெற்றனர்.

இதன் மூலம் ஹேலீஸ் அணி 50 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 316 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய டீஜே லங்கா வெற்றிக்காக போராடியபோதும் அந்த அணியால் விக்கெட்டுகளை காத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அந்த அணி 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

போட்டியின் சுருக்கம்

ஹேலீஸ் – 316/4 (50) – லஹிரு திரிமான்ன 109*, அண்டி சொலமன் 69, ரொன் சந்திரகுப்தா 65, அவிஷ்க பெர்னாண்டோ 30, ஹிமேஷ் ராமனாயக்க 1/61, லக்ஷான் சந்தகன் 1/57, கசுன் மதுசங்க 1/64, சச்சித்ர சேரசிங்க 1/37

டீஜே லங்கா – 245 (42.4) – ருவிந்து குணசேகர 71, சச்சித் பதிரண 52, மினோத் பானுக்க 34, கித்ருவன் விதானகே 21, லசித் எம்புல்தெனிய 4/78, பிரபாத் ஜயசூரிய 2/29, நிமேஷ் குணசிங்க 1/44, அலி கான் 1/31, பினுர பெர்னாண்டோ 1/15

முடிவு – ஹேலீஸ் 71 ஓட்டங்களால் வெற்றி


சம்பத் வங்கி எதிர் மாஸ் சிலுயேட்டா

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சம்பத் வங்கியை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய மாஸ் சிலுயேட்டா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

>> கட்டாய வெற்றிக்காக ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை அணி

சிங்கர் பிரீமியர் லீக் தொடரின் முதல் நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்த இரு அணிகளும் வெற்றி பெறும் எதிர்பார்ப்புடனேயே இந்த போட்டியில் களமிறங்கின. எனினும் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சம்பத் வங்கி 203 ஓட்டங்களுக்கே சுருண்டது. அந்த அணியின் சமீன் கதனாரச்சி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்களை பெற்றபோதும் அந்த அணியின் ஏனைய வீரர்கள் சோபிக்க தவறினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மாஸ் சிலுயேட்டா, பெரிதாக நெருக்கடி இன்றி 39 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஷெஹான் பெர்னாண்டோ 51 ஓட்டங்களை பெற்றதோடு நிமந்த சுபசிங்க ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை பெற்று வெற்றயை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 203 (47.1) – சமீன் கந்தனாரச்சி 74, சரித்த புத்திக்க 36, புத்திக்க சஞ்ஜீவ 3/39, டனோஷ் டி சில்வா 2/39, சங்கீத் குரே 2/41

மாஸ் சிலுயேட்டா – 206/6 (39) – நிமந்த சுபசிங்க 57*, ஷெஹான் பெர்னாண்டோ 51, இரோஷ் சமரசூரிய 27, ஜீவன் மெண்டிஸ் 2/43, சச்சித்ர பெரேரா 2/70

முடிவு – மாஸ் சிலுயேட்டா 4 விக்கெட்டுகளால் வெற்றி


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் கொமர்சியல் கிரெடிட்

சாமர கப்புகெதர மற்றும் சதுரங்க டி சில்வாவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் ஜோன் கீல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொமர்சியல் கிரெடிட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

பி. சரா ஓவல் மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் அணிக்கு திமுத் கருணாரத்ன 84 ஓட்டங்களை பெற அந்த அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களை பெற்றது.

எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொமர்சியல் கிரெடிட் அணிக்கு கபுகெதர வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டியதோடு சகலதுறை வீரர் சதுரங்க டி சில்வா சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். எனினும் இந்த இருவரும் சதம் பெறுவதை தவறவிட்டனர். கப்புகெதர ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை பெறும்போது சதுரங்க டி சில்வா 92 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

>> லசித் மாலிங்கவுக்கு நல்வரவு

எவ்வாறாயினும் இவர்களின் துடுப்பாட்டத்தின் மூலம் கொமர்சியல் கிரெடிட் அணி 44.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 272 ஓட்டங்களை எட்டியது.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 271/9 (50) – திமுத் கருணாரத்ன 84, பானுக்க ராஜபக்ஷ 60, லஹிரு மிலந்த 38, ரொஷேன் சில்வா 25, ஜெப்ரி வன்டர்சே 21*, மலிந்த புஷ்பகுமார 2/45, லஹிரு கமகே 2/53

கொமர்சியல் கிரெடிட் – 272/4 (44.3) – சதுரங்க டி சில்வா 92, சாமர கபுகெதர 91*, சதுன் வீரக்கொடி 30, அஷான் பிரியன்ஜன் 29, இஷான் ஜயரத்ன 2/48

முடிவு – கொமர்சியல் கிரெடிட் 6 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<