யுனிலிவர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – B மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் மாஸ் சிலுவெட்டா அணி, பவர் டெக் சிமென்ட் அணியை வீழ்த்தியதோடு, இன்று (04) நடைபெற்ற ஏனைய லீக் போட்டிகளில் கொமர்ஷியல் கிரெடிட் மற்றும் ஜோன் கீல்ஸ் அணிகள் இலகு வெற்றியீட்டின.
மாஸ் சிலுவெட்டா எதிர் பவர் டெக் சிமென்ட்
கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்ற பவர் டெக் சிமென்ட் அணியுடனான போட்டியில் மாஸ் சிலுவெட்டா அணி, டக்வத் லூவிஸ் முறையில் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தமதாக்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பவர் டெக் சிமென்ட் முதலில் மாஸ் சிலுவெட்டா அணியை துடுப்பாடுமாறு பணித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மாஸ் சிலுவெட்டா அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 270 ஓட்டங்களை குவித்தது. தெனுவன் ரஜகருணா 81 ஓட்டங்களைப் பெற்றதோடு ஷெஹான் பெர்னாண்டோவும் (55) அரைச்சதம் பெற்றார். அஞ்செலோ எம்மானுவேலின் (44) துடுப்பாட்டமும் அந்த அணிக்கு பலம் சேர்த்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்
தேசிய அணியின் தெரிவாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக…
பந்துவீச்சில் பவர் டெக் சிமென்ட் சார்பில் சந்தகன் பதிரன 12 ஓட்டங்களை மத்திரம் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய பவர் டெக் சிமென்ட் அணி தனது விக்கெட்டை காத்துக்கொண்டு இலக்கை அடையத் தவறியது. இறுதியில் அந்த அணி 35.1 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் தனித்துப் போராடிய மனல்க டி சில்வா 88 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் மாஸ் சிலுவெட்டா அணி சார்பில் புத்திக்க சஞ்ஜீவ மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
மாஸ் சிலுவெட்டா – 270 (48.1) – தெனுவன் ராஜகருணா 81, ஷெஹான் பெர்னாண்டோ 55, அஞ்செலோ எம்மானுவேல் 44, சந்தகன் பத்திரன 2/12, கவிந்து பண்டார 2/42, டில்ஷான் சந்திமால் 2/42
பவர் டெக் சிமென்ட் – 216 (35.1) – மனல்க டி சில்வா 88, சந்தகன் பத்திரன 31, புத்திக சஞ்ஜீவ 3/60, துஷான் ஹேமந்த 3/35
முடிவு – டக்வத் லூவிஸ் முறைப்படி மாஸ் சிலுவெட்டா அணி 25 ஓட்டங்களால் வெற்றி
யுனிலிவர் ஸ்ரீலங்கா (B) எதிர் கொமர்ஷியல் கிரெடிட் (B)
அருன டயசின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் ரங்க குரேவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் யுனிலிவர் ஸ்ரீலங்கா அணியுடனான லீக் சுற்றில் கொமர்ஷியல் கிரெடிட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது.
கட்டுநாயக்க, FTZ மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யுனிலிவர் ஸ்ரீலங்கா அணி விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்து 35.3 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு சுருண்டது. யுனிலிவர் அணிக்காக தர்ஷன கலன்சூரிய அதிகபட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.
எதிரணி துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்த அருன டயஸ் 26 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
ரொஷானின் அபார சதத்தால் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முன்னேற்றம்
சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1)..
இந்நிலையில் இலகுவான இலக்கொன்றை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கொமர்ஷியல் கிரெடிட் அணி 32.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில் ரங்க குரே ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களைப் பெற்றதோடு அகீல் இன்ஹாம் 51 ஓட்டங்களைக் குவித்தார்.
போட்டியின் சுருக்கம்
யுனிலிவர் ஸ்ரீலங்கா (B) – 164 (35.3) – தர்ஷன கலன்சூரிய 35, கிஹான் டி சொய்சா 30, அருன டயஸ் 5/26
கொமர்ஷியல் கிரெடிட் (B) – 165/2 (32.4) – ரங்க குரே 75*, அகீல்ம் 51 இன்ஹா
முடிவு – கொமர்ஷியல் கிரெடிட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி
சிங்கர் ஸ்ரீலங்கா எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (B)
சிங்கர் ஸ்ரீலங்கா அணியின் விக்கெட்டுகளை தரிந்து ரத்னாயக்க சாய்க்க ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி எந்த சவாலும் இன்றி லீக் சுற்றுப் போட்டியை 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சிங்கர் ஸ்ரீலங்கா அணி 33.5 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்ட்த்தில் இசுரு சாமர மாத்திரம் 46 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுவூட்டினார்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் தரிந்து ரத்னாயக்க 23 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி எந்த நெருக்கடியும் இன்றி 17 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது. கவீன் பண்டார அதிரடியாக துடுப்பாடி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை சேர்த்தார்.
போட்டியின் சுருக்கம்
சிங்கர் ஸ்ரீலங்கா – 125 (33.5) – இசுரு சாமர 46, லோச்சன பண்டார 26, தரிந்து ரத்னாயக்க 6/23, சசிந்து பெரேரா 2/17
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (B) – 126/1 (17) – கவீன் பண்டார 55*, ரவிந்து கொடிதுவக்கு 29, மனோஜ் சரத்சந்திர 28*
முடிவு – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி