பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் வரலாற்றில் 24 வயதை எட்டுவதற்கு முன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பிரேசில் ஜாம்பவான் பீலேவின் உலக சாதனையை பிரான்ஸ் அணியின் நட்சத்திர முன்கள வீரரான கிலியன் எம்பாப்வே முறியடித்துள்ளார்.
கிலியன் எம்பாப்பே மற்றும் ஒலிவியர் ஜிரோட்டின் கோல்கள் மூலம் போலந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் பிரான்ல் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் 2 கோல்களை அடித்த கிலியன் எம்பாப்வே, இம்முறை உலகக் கிண்ணத்தில் தனது 5ஆவது கோலைப் பதிவு செய்தார். அத்துடன், ஒட்டுமொத்த உலகக் கிண்ணத்தில் அவரது ஒன்பதாவது கோலாகவும் இது பதிவானது.
>> பிரான்ஸுடனான காலிறுதிக்கு இங்கிலாந்து தகுதி
அதுமாத்திரமின்றி, 24 வயதை எட்டுவதற்கு முன் கால்பந்து உலகக் கிண்ணத்தில் ஏழு கோல்கள் அடித்த பீலேவின் 60 ஆண்டுகால உலக சாதனையை கிலியன் எம்பாப்வே முறியடித்தார்.
முன்னதாக 2018 பிபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஒரு பதின்ம வயது வீரராக (18 வயது) கோல் அடித்த பீலேவின் பெருமையை அவர் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த உலகக் கிண்ணத்தில் 4 கோல்களை அடித்த எம்பாப்வே, 2018 உலகக் கிண்ணத் தொடரின் இளம் வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.
இதனிடையே, 24 வயதை எட்டுவதற்கு முன் கால்பந்து உலகக் கிண்ண அத்தியாயம் ஒன்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை முறியடிக்க கிலியன் எம்பாப்வேக்கு இன்னும் 2 கோல்கள் மாத்திரமே தேவைப்படுகின்றன.
>> கால்பந்து உலகின் அடுத்த பீலேவாக உருவெடுத்துள்ள எம்பாப்வே
கடந்த 1959ஆம் ஆண்டில் பிரேசிலின் பீலேயும், 1978ஆம் ஆண்டில் ஆர்ஜென்டீனாவின் மாரியோ கெம்பஸும், 2014ஆம் ஆண்டில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரொட்ரிகோவும் 6 கோல்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருக்கிறது.
எம்பாப்வே இப்போதே 5 கோல்களை அடித்துவிட்டார். இன்னும் காலிறுதி உள்ளிட்ட அடுத்த கட்டப் போட்டிகள் இருப்பதால் 24 வயதை எட்டுவதற்கு முன் உலகக் கிண்ண அத்தியாயம் ஒன்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு உள்ளது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<