இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடவுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மயங்க் அகர்வால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த 2018ம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றார். இந்தநிலையில் கடந்த ஆண்டு முன்னாள் தலைவரான கே.எல்.ராஹுல் அணியிலிருந்து வெளியேறி, லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணியுடன் இணைந்துக்கொண்டதன் காரணமாக மயங்க் அகர்வால் தலைவராக நியமனம் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உப தலைவராக செயற்பட்டிருந்த மயங்க் அகர்வால், ராஹுல் விளையாடாத போட்டிகளில் தலைமைத்துவத்தை ஏற்றிருந்தார். மயங்க் அகர்வால் கடந்த 2011ம் ஆண்டு முதல் IPL தொடரில் விளையாடிவரும் நிலையில், முதன்முறையாக IPL அணியொன்றின் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மயங்க் அகர்வால் குறிப்பிடுகையில், “நான் 2018ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் அணியுடன் இணைந்துள்ளேன். இந்த அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமையடைகிறேன். அணியின் தலைவராக செயற்படும் வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பொறுப்பை மிகவும் ஆழமாக ஏற்றுக்கொள்கிறேன். இம்முறை அணியில் உள்ள வீரர்களை பார்க்கும் போது, எனது பணி இலகுவாக இருக்கும் என எண்ணுகிறேன்” என்றார்.
IPL தொடருக்கான இந்த பருவகால போட்டிகள் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இம்முறை தொடரில் 10 அணிகள் இரண்டு குழுக்களாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<